Ad Widget

நுகர்வோர் சட்டத்தை மீறிய 20 வர்த்தகர்களுக்கு ரூ.187,500 தண்டம்

fineநுகர்வோர் சட்டத்தை மீறிய 20 வர்த்தகர்களிடமிருந்து 187,500 ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி நடராசா சிவசீலன் இன்று தெரிவித்தார்.

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த மற்றும் பொதியிடப்பட்ட உணவுப் பொருட்களுக்குரிய காலாவதியாகும் திகதியை குறிப்பிடாது உணவுப் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களிடமிருந்தே நீதிமன்றம் இந்த தண்டப்பணத்தை அறவிட்டுள்ளது.

சாவகச்சேரி, பருத்தித்துறை, மல்லாகம் நீதிவான் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 27 வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த வர்த்தகர்களுக்கு எதிராக சாவகச்சேரி, பருத்தித்துறை, மல்லாகம் ஆகிய நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மேற்படி வழக்குகள் நீதிவான்கள் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்போது, சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய 12 வர்த்தகர்களில் 10 வர்த்தகர்களிடமிருந்து தலா 10,000 ரூபா வீதம் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவும் மற்றுமொருவருக்கு 5,000; ரூபாவும் தண்டம் விதிக்கப்பட்டதுடன், நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத வர்த்தகர் ஒருவருக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய 13 வர்த்தகர்களில் 9 பேரிடமிருந்து தலா 9,000 ரூபா வீதம் 81,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டதுடன், நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத 4 வர்த்தகர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டன.

மல்லாகம் நீதமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய 2 வர்த்தகர்களில் ஒருவருக்கு 1,500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டதுடன், மற்றைய வர்த்தகருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

உணவு விடுதிகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பொதி செய்யப்பட்ட உணவு வகைகளை விற்பனை செய்யும்போது, உற்பத்தித் திகதி மற்றும் காலாவதியாகும் திகதி என்பவற்றினை குறிப்பிட்டு விற்பனை செய்யுமாறும் விலைப்பட்டியலில் காட்சிப்படுத்தி விற்பனை செய்யுமாறும் வர்த்தகர்களுக்கு ஏற்கெனவே பல முறை அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி தெரிவித்தார்.

Related Posts