Ad Widget

நீலப்படையணி என்ற போர்வையில் நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டார்கள் – வேல்முருகன் தங்கராசா

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் கடந்த காலங்களில் இருந்த சிலர், நீலப்படையணி என்ற போர்வையில் நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன் தங்கராசா, சனிக்கிழமை (17) தெரிவித்தார்.

velmurugan-thankarasa

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடகிழக்கு மக்களின் வாக்கு பலத்தால் தான் மைத்திரிபால சிறிசேன தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

இது ஒரு சரித்திரம். தேர்தல் காலத்தில் கூறப்பட்ட விதிகள் அனைத்தும் செய்து முடிப்பர் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் 51 உறுப்பினர்கள் இருக்கின்றனார். அதில் 3 தமிழ் உறுப்பினர்கள் இருக்கின்றோம். 16 வருடங்களாக நான் சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவில் இருக்கின்றேன்.

கடந்த கால அரசியலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்களாக இருந்தவர்கள் சந்தர்ப்பவாதிகள், கடத்தல்காரர்கள், போதைவஸ்து வியாபாரிகள், கசிப்பு விற்பவர்கள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்களாக தான் இருக்கிறார்கள்.

அரசியல் ஜனநாயகத்திற்கு எதிராக செயற்ப்பட்டார்கள். இந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இருந்த நீலப்படையணி எங்கே? நீலப்படையணி பற்றி தான் அனைவரும் கேள்விகள் கேட்கப்போகிறார்கள்.

அங்கு ஜனநாயக முறைப்படி எந்த ஒரு செயற்பாடும் நடைபெறவில்லை. கட்சியின் கொள்கை திட்டம் தெரிந்தவர்கள் தான் பதவியில் இருக்க வேண்டும். ஊழல்கள் தொடர்பாகவும் ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பாகவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையும் விசாரணைகளும் இடம்பெறும்.

மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பகாலத்தில் சிறந்த மனிதராக இருந்தார். பின்னர் அவருடைய செயற்பாடுகள் எல்லாம் எமது கட்சிக்கு முரணான செயற்பாடுகளாகவே இருந்தது.

சந்திரிக்காவை நீக்குவதற்கு அதிகமாக சதி செய்தார்கள். கட்சி காரியாலயத்தில் அவரின் ஒரு படம் கூட இருக்கவில்லை. தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்ற போது எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தது.

ஆனால் தேர்தலில் இரகசியமான முறையில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிற்கு வாக்கு சேகரித்தேன் என்றார்.

அத்துடன், எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுவதற்கும் பயங்கரமான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் யாழ்ப்பாணத்தில் குழு ஒன்று தேர்தல் காலத்தில் இயங்கி வந்தது எனவும் இவ்வாறான நடவடிக்கைகள் இனி வரும் காலங்களில் நடைபெறாது என நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Posts