Ad Widget

நீதி விசாரணை கோரும் நாடுகடந்த இலங்கை ஊடகவியலாளர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து புதிய அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பை ஏற்று, நாடுகடந்து வாழ்கின்ற ஊடகவியலாளர்கள் நாடுதிரும்புவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆட்சி மாற்றத்தின் மூலம் ஊடக சுதந்திரத்திற்கான வழிகள் பிறக்கும் என்ற நம்பிக்கையில் நாடுதிரும்பத் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் சுதந்திர ஊடக இயக்கத்தின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான சுனந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.

ஆனால், இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நீதி வழங்குவதன் மூலமே நாடு கடந்து வெளிநாடுகளில் வாழும் ஊடகவியலாளர்களுக்கு உத்தரவாதம் ஒன்றை அரசாங்கம் வழங்கமுடியும் என்றும் சுனந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.

எனினும் தமிழ் ஊடகவியலாளர்கள் நாடு திரும்புவதற்கு சாதகமான சூழ்நிலைகள் இன்னும் இலங்கையில் திரும்பவில்லை என்று நாடுகடந்து வாழும் இலங்கை ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவகுமார் சுட்டிக்காட்டினார்.

2005-ம் ஆண்டு முதலான கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையிலிருந்து 80க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் வெளியேறியுள்ளதாக ஐஎஃப்ஜே என்ற சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனம் கூறுகின்றது.

1999-ம் ஆண்டு முதல் குறைந்தது 25 ஊடகவியலாளர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்னர்.

இவர்களில் குறிப்பாக 10 ஊடகவியலாளர்கள் 2007-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவான சிபிஜே என்ற சர்வதேச அமைப்பு கூறுகின்றது.

2010 ம் ஆண்டு ஜனவரியில் காணாமல்போன பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் நிலைமை என்னவென்று இன்னும் தெரியவில்லை.

ஊடகவியலாளர்களின் மீதான படுகொலைகள், காணாமல்போதல்கள், தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் உரிய சட்டநடிவடிக்கை எடுக்காது சூத்திரதாரிகள் நீதியின் முன்னால் நிறுத்தப்படாமல் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழ்நிலையே இலங்கையில் ஊடக சுதந்திரத்துக்கு உள்ள மிகப்பெரிய தடை என்று ஐஎஃப்ஜே அண்மையில் கூறியிருந்தது.

‘நான் 5 ஆண்டுகள் இலங்கைக்கு வெளியில் இருக்கின்றேன். நாடுதிரும்பத் தான் எண்ணிக்கொண்டிருந்தேன். தற்போது இலங்கையில் அரசியல்மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்கின்றது…ராஜபக்ஷ ஆட்சி வீழ்ந்துவிட்டதால் அங்கு சென்று பணியாற்றக்கூடிய சூழ்நிலை உருவாகியிருப்பதாகத் தான் கருதுகின்றேன்’ என்றார் சுனந்த தேஷப்பிரிய.

எனினும், இலங்கையில் சிங்கள ஊடகவியலாளர்களிலும் பார்க்க தமிழ் ஊடகவியலாளர்களின் நிலைமை வேறுபட்டது என்று சுதந்திர ஊடக இயக்கத்தின் முன்னாள் பேச்சாளர்களில் ஒருவரான சிவகுமாரன் கூறினார்.

தமிழ் ஊடகவியலாளர்களை ‘புலி ஆதரவாளர்கள்’ என்று முத்திரை குத்துகின்ற பண்பு மாறிவிட்டதா என்பது கேள்விக்குறியே என்றும் சிவகுமாரன் கூறினார்.

‘புலம்பெயர்ந்திருக்கின்ற ஊடகவியலாளர்கள் சிலர், நடைபெற்றுமுடிந்த யுத்தத்தில் சாட்சிகளாக இருக்கிறார்கள்’ என்றும் கூறினார் நாடுகடந்து வாழும் இலங்கை ஊடகவியலாளர் சிவகுமாரன்.

Related Posts