Ad Widget

நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 6-வது ஆட்டம் கார்டிப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் குரூப் ஏ பிரிவில் உள்ள இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் விளையாடின. டாஸ் வென்ற நியூசிலாந்து, இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி இங்கிலாந்தின் துவக்க வீரர்களாக ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இவர்கள் 37 ரன்கள் எடுத்த நிலையில் இந்த ஜோடியை பிரித்தார் மில்னே. அவரது பந்துவீச்சில் ராஜ் (13) போல்டாகி வெளியேறினார். அதன்பின்னர் ஹேல்ஸ், ரூட் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஸ்கேர்ர் உயர்ந்தது.

இந்நிலையில் ஹேல்ஸ் 56 ரன்கள் எடுத்த நிலையில், மில்னே பந்தில் போல்டானார். கேப்டன் மோர்கன் 13 ரன்கள் மட்டுமேசேர்த்து ஏமாற்றம் அளித்தார். சிறப்பாக ஆடிய ஜோ ரூட், 64 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 48 ரன்களும் சேர்த்து பெவிலியன் திரும்பினர். அப்போது அணியின் ஸ்கோர் 210 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. பட்லர் மட்டும் நிலைத்து நின்று அரை சதம் கடந்தார். இதனால், 49.3 ஓவர்களில் இங்கிலாந்து 310 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பட்லர் 61 ரன்களுடன் களத்திலிருந்தார்.

நியூசிலாந்து தரப்பில் மில்னே, ஆண்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். சவுத்தி 2 விக்கெட்டும், போல்ட், சான்ட்னெர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், குப்தில், ரோஞ்சி தொடக்க ஆட்டக்காரர்களாக பேட்டிங் செய்தனர். முதல் ஓவரின் நான்காவது பந்திலேயே ரோஞ்சி டக் அவுட் ஆனார். இதையடுத்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார்.

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் மற்றும் கப்தில் அணியின் ஸ்கோரை உயர்த்த கடும் முயற்சி எடுத்தனர். 14-வது ஓவரில் கப்தில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய டெய்லர், வில்லியம்சனுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்சன் 87 ரன்களில் வுட் பந்தில் வெளியேறினார்.

இதனையடுத்து களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் வருவதும் போவதுமாக இருந்தனர், இதனால், அணியின் ஸ்கோர் மெதுவாகவே உயர்ந்தது. இங்கிலாந்து அணியினரின் சிறப்பான பந்துவீச்சினால் அந்த அணி 45 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பிளங்கிட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

Related Posts