திருக்கோவில், தம்பிலுவில் பிரதேச சபைக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு பகுதியில் கொலை செய்யப்பட்ட பொலிஸாருக்கு நினைவுத்தூபி அமைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என வட.மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“குறித்த பிரதேசத்தில் பொது மக்களுக்குச் சொந்தமான 400 ஏக்கர் காணிகள் சட்டவிரோதமாகச் சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதிகளில் நினைவுத்தூபி அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் அப்பகுதிகளில் புதிய கட்டடங்களும் மக்கள் குடியேற்றங்களும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு வருவதாகவும் அறியக்கிடைத்துள்ளதுடன், இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒருபக்கத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களது நினைவுச் சின்னங்களை அழித்து வரும் இலங்கை அரசாங்கம் மறு பக்கத்தில் பொலிஸாருக்கான நினைவுத்தூபிகளை அமைப்பது மட்டுமல்லாது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் ஏற்படுத்த முனைகின்றது.
இச்செயற்பாடுகள் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட சிங்கள அரசாங்கம் தனது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலினைச் செயற்படுத்தி வருகின்றமை தெளிவாகப் புரிகின்றது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.