Ad Widget

நிதிநிறுவன மோசடியாளரை இந்தியாவுக்கு அழைத்துச் சென்றவர் சிக்கினார்!!

வாடிக்கையாளர்கள் வைப்பிலிட்ட பணத்தை மோசடி செய்து கொண்டு இந்தியாவுக்குத் தப்பித்த தனியார் நிதி நிறுவன உரிமையாளரின் குடும்பத்தை படகில் ஏற்றிச் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் காவல்துறைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவுக்குச் சென்று வந்திருக்கலாம் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழக காவல்துறையினாிடம் நிதி நிறுவன உரிமையாளர் வழங்கிய வாக்குமூலம் கிடைத்ததும் படகு உரிமையாளர் கைது செய்யப்படுவார் என்று வல்வெட்டித்துறை காவல்துறையினா்தெரிவித்தனர்.

தமிழகம் வேதாரண்யம் கோடிக்கரையில் யாழ்பாணத்தில் இருந்து சட்டத்துக்குப் புறம்பான முறையில் படகு ஒன்றில் பயணித்த திருகோணமலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றை தமிழக கடலோர காவல் படையினர் கைது செய்தனர்

முகமது அன்சாரி (வயது 45) அவரது மனைவி சல்மா வேகம் (வயசு 35) இவர்களது 10 வயது மகன் ஆகியோரே கோடியக்கரை சவுக்கு காட்டில் கரையேறிய போது கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் தமது உண்மையான விவரங்களை மறைத்து ஆரம்பத்தில் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்டதை தொடர்ந்து காவல்துறையினா் முன்னெடுத்த விசாரணையில் அவா் இலங்கையில் தனியார் நிதி நிறுவன உரிமையாளர் என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அந்த மூன்று பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் படையினர் கைது செய்து தமிழக காவல்துறையினாிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.

அண்மைக் காலமாக கிழக்கு மாகாணத்தில் நிதி நிறுவனம் ஒன்று நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் வைப்புக்களை மோசடி செய்து தலைமறைவான நிலையில் பல்வேறு பிரதேசங்களில் நீதிமன்றங்களில் இவருக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 06 வருடங்களாக கிழக்கு மாகாணம் அடங்களாக நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனம் கிழக்கின் முக்கிய நகரங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கியதுடன் கல்முனை, மருதமுனை, சம்மாந்துறை, பொத்துவில் உள்ளிட்ட பிரதேசங்கள் முழுவதிலும் மொத்தமாக 200 கோடி ரூபாயையும் நாடு முழுவதிலும் ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துள்ளார் எனத்தெரிவிக்கப்படுகின்றது.

நிதி நிறுவன உரிமையாளரை யாழ்ப்பாணத்திலிருந்து படகில் அழைத்துச் சென்று இறக்கினார் என்ற குற்றச்சாட்டில் வல்வெட்டித்துறை தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த ஒருவர் அவரது வீட்டில் காவல்துறைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இந்தியாவுக்குச் சென்று வந்திருக்கலாம் என்ற அடிப்படையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், தமிழகக் காவல்துறையினரிடம் நிதி நிறுவன உரிமையாளர் வழங்கிய வாக்குமூலம் கிடைத்ததும் படகு உரிமையாளர் கைது செய்யப்படுவார் என்று வல்வெட்டித்துறை காவல்துறையினர் தெரிவித்தனர்

Related Posts