Ad Widget

நாளை வடக்கு விவசாய அமைச்சின் உழவர் பெருவிழா

வடமாகாண விவசாய அமைச்சின் 2017 ஆம் ஆண்டுக்கான உழவர் பெருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை (22.01.2017) கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்ச்சியில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த, ‘பூமியை மீளுயிர்ப்பூட்டும் முன்னோடிகளின் நிறுவகம்’ என்ற அமைப்பின் பணிப்பாளர் திருமதி ரேவதி மாரிமுத்து அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள உள்ளார்.

வடக்கு விவசாய அமைச்சு ஆண்டுதோறும் பயிர்வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகளை நடாத்தி வெற்றி பெற்ற சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நோக்கில் உழவர் பெருவிழாவைக் கொண்டாடி வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டில் சிறந்த வீட்டுத்தோட்டச் செய்கையாளர், சிறந்த சேதன விவசாயச் செய்கையாளர், வயல் நிலங்களில் சிறந்த பயிர் மாற்றீட்டுச் செய்கையாளர், சிறந்த சேதன உள்ளீடு உற்பத்தியாளர், சிறந்த காளான்செய்கையாளர், சிறந்த பழச்செய்கையாளர், சிறந்த பயிர் மாற்றீட்டுத் திட்டச் செய்கையாளர், தூவல்நீர்ப்பாசனத்தின்கீழ் சிறந்த நிலக்கடலைச் செய்கையாளர், நுண்நீர்ப்பாசனத்தின்கீழ் சிறந்த பப்பாசிச் செய்கையாளர், சிறந்த பப்பாசிச் செய்கையாளர், மரக்கறிச் செய்கையாளர், சிறந்த விவசாய நடைமுறைகளைச் செயற்படுத்தும் விவசாயி, நெற்செய்கையில் சீரான களை முகாமைத்துவத்தினூடாகச் சிறந்த விளைச்சலைப் பெறுபவர், சிறந்த மறுவயற் செய்கையாளர், புதிய பயிராக்கவியல் தொழில்நுட்பங்களுடனான வர்த்தகரீதியான சிறந்த வாழைச் செய்கையாளர், சிறந்த பாற்பசுப்பண்ணையாளர் , சிறந்த ஆட்டுப்பண்ணையாளர், சிறந்த கோழிப்பண்ணையாளர் ஆகிய பிரிவுகளில் மாவட்டரீதியாக நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 120 சாதனையாளர்கள் இந்நிகழ்ச்சியின்போது கேடயங்களும், சான்றிதழ்களும் பணப்பரிசுகளும் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.

உழவர்களைக் கௌரவிக்கும் இப்பெருவிழாவில் பொன்சக்தி கலாகேந்திரா நிறுவனத்தினரின் ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’ கிராமிய நடன நிகழ்ச்சியும், தொன்மம் கலைக்குழுவினரின் பறை இசை முழக்கம் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.

அத்தோடு நிகழ்ச்சி நடைபெறவுள்ள மைதானத்தில் பிற்பகல் 1 மணி முதல் ‘வறட்சியை எதிர் கொள்ளவல்ல விவசாய முறைமைகள்’ என்ற கருப்பொருளில் விவசாயக் கண்காட்சி இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts