Ad Widget

‘நானே என்னை வெட்டிக் கொண்டேன்’ – வட்டரெக விஜித்த தேரர்

தனது மர்ம உறுப்பு உள்ளிட்ட உடல் பாகங்களை தானே வெட்டிக்கொண்டதாக ஜாதிக பல சேனாவின் தலைவர் வட்டரெக விஜித்த தேரர் பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

therar-pikku

இதன் படி வட்டெரெக விஜித்த தேரரை கைது செய்வதா இல்லையா என்பதை அவர் வைத்தியசாலையிலிருந்து விடுதலையானதன் பின்னர் தீர்மானிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 17 ஆவது அறையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவரும் வட்டரெக விஜித்த தேரர் உடல் நிலை தேறி வரும் நிலையில் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறலாம் என நேற்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந் நிலையில் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினால் அவரை கைது செய்ய பொலிஸார் தயார் நிலையில் இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அஜித் ரோஹண மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வட்டெரெக விஜித்த தேரர்’ என்னை நானே வெட்டிக்கொண்டேன்’ எனவும் நடந்த முழு சம்பவமும் தன்னாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும் காயங்கள் அனைத்தும் அவராலேயே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவை என்பதை உறுதி செய்துள்ளன.

இந் நிலையில் பொய்யான முறைப்பாடு அளித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எனினும் அவரை கைது செய்வதா இல்லையா என்பது குறித்து அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய பின்னரேயே தீர்மானிக்கப்படும் என்றார்.

கடந்தவாரம் பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரண பாலம் அருகே வீதியோரத்தில் மயக்க நிலையில் காயங்களுடன் கிடந்த வட்டரெக விஜித்த தேரர் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல் பகுதிகளில் பிளேட் வெட்டுக்காயங்களும் மர்ம உறுப்புப் பகுதியில் காயங்களும் மருத்துவர்களால் அவதானிக்கப்பட்டது.

இது தொடர்பிலான விசாரணைகளை பாணந்துறை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரூடாக மேற்கொள்ளப்பட்டது.

இந் நிலையிலேயே சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை ஊடாக வட்டரெக விஜித்த தேரர் செய்துகொண்டது ஒரு நாடகம் என தெரியவந்தது.

Related Posts