Ad Widget

நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

முப்படை மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ்ப்பாணத்தில் 69 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களின் மேலைத்தேய இசை வாத்தியங்களும் முழங்க, சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஏ9 வீதி மற்றும் கச்சேரி நல்லூரி வீதிகள் மூடப்பட்டிருந்ததுடன், பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, அம்பகமுவ பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வுகள் கினிகத்தேனை நகரில் இடம்பெற்றது.

மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மூன்று இன மத தலைவர்களும், பிரதேச செயலகத்தின் செயலாளர் ஐ.சி.பீ.சுமனசிரி, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளர் டபிள்யூ.ஜீ. ரணசிங்க, பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது இராணுவம், பொலிஸ் மற்றும் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பும், மரியாதையும் இடம்பெற்றன. அத்தோடு கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதனிடையே, அட்டன் செனன் ஜன சமூக சங்கத்தின் ஏற்பாட்டில் “இனங்களால் வேறுபட்டாலும் இலங்கையராய் ஒன்றினைவோம்” என்ற தொனிப்பொருளில் சுதந்திர தின கொண்டாட்டமும், சமாதான ஊர்வலமும் அன்று இடம்பெற்றன.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமாதான ஊர்வலம் ஹட்டன் செனன் சந்தியிலிருந்து ஹட்டன் கொழும்பு பிரதான வீதியினூடாக செனன் தேயிலை தொழிற்சாலை வரை பயணித்தது.

இதுதவிர, மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன.

இதன் அடிப்படையில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடா தொகுதி கிளை, இலங்கை ஜமாதே இஸ்லாமியின் ஓட்டமாவடி கிளை, ஓட்டமாவடி பிரதேச சபை, கல்குடா ஐக்கிய ஆட்டோ சாரதிகள் சங்கம் என்பன தனித்தனியாக ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வுகள் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்களில் இடம்பெற்றன.

இதன் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடா தொகுதி கிளையினால் பொது மக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

Related Posts