Ad Widget

நாடு முழுவதும் தமிழ்-முஸ்லிம் மக்கள் காலையில் வாக்களித்து விட வேண்டும்!

நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் மக்கள், ஜனவரி எட்டாம் திகதி காலை ஏழு மணிக்கும் பத்து மணிக்கும் இடையில் தமது வாக்குகளை அளித்து விட வேண்டும். அன்று மாலை நேர வாக்களிப்பு வேண்டாம். தாமதம் வேண்டாம். மாலை நான்கு மணிவரை வாக்களிப்புக்கான வாய்ப்பு இருந்தாலும் நாம் நேர காலத்துடன் வாக்களிப்பது நமது வீட்டுக்கும், நமது நாட்டுக்கும் நல்லது. இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

mano-ganeshan

மாத்தளை நகரில் நடைபெற்ற பொது எதிரணி பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு:-

இந்த ஆட்சிக் கொடுமையில் இருந்து கொஞ்சமாவது மீண்டு தலை தூக்க வேண்டும். இன்றைய இறுக்கமான சூழலில் இருந்து கொஞ்சமாவது மீள வேண்டும்.

துன்பப்படும் தமிழ் பேசும் மக்களின் கோணத்தில் இருந்து பார்த்தால் தான் இந்த உண்மைகள் புரியும். இதற்கு இன்று எம்முன் இருக்கும் ஒரே வழி அன்னப்பறவை சின்னத்துக்கு வாக்களித்து இன்றைய ஆளும் கூட்டணியை தோற்கடிப்பதுதான்.

அதனாலேயே பல்வேறு விட்டுக் கொடுப்புகளுடன் இந்த கூட்டணியில் இன்று நாம் இருக்கின்றோம். எங்கள் அரசியல் சமூக வாழ்வில் ஆரம்பித்து, எம் சமூக பொருளாதார வாழ்விலும் கை வைக்க இவர்கள் ஆரம்பித்து விட்டார்கள்.

எமது நேர்மையான நியாயமான அரசியல் அபிலாஷகளை பிடுங்கினார்கள். நாம் என்ன தொழில் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு எம் பொருளாதாரத்தில் கை வைத்தார்கள். இப்படியே போனால் நாம், நாளை நாம் வழிபடுவதற்கும் தொழுவதற்கும் பிரார்த்திப்பதற்கும் இவர்களிடம் அனுமதி வாங்க வேண்டி வரும்.

எனவே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்று வாதப்பிரதிவாதங்கள் தேவையில்லை. தயக்கங்களுக்கு அவசியம் இல்லை. எமது வாக்கு முக்கியமானது. அதை பாதுகாப்பாக உரிய இடத்துக்கு கொண்டு சென்று சேர்ப்பது அதைவிட முக்கியமானது. இந்த காட்டாட்சியை விரட்ட அதை பயன்படுத்த வேண்டும். எனவேதான் ஜனவரி எட்டாம் திகதி காலை ஏழு மணிக்கும், பத்து மணிக்கும் இடையில் தமது வாக்கை அளிக்க வேண்டும் என தமிழ், முஸ்லிம் மக்களை நான் கோருகிறேன்.

தாமதிக்காதீர்கள். எங்கள் தாமதம், தோல்வியில் துவண்டு கொண்டிருக்கும் இவர்களுக்கு சட்ட விரோத வாய்ப்புகளை தந்து விடலாம். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். – என்றார்.

Related Posts