Ad Widget

நல்லூர்க் கந்தன் உற்சவ காலத்தை முன்னிட்டு யாழ்.மாநகர சபையால் பல்வேறு நடவடிக்கைகள்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் உற்சவ காலத்தை முன்னிட்டு யாழ்.மாநகர சபை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.

மாநகர சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆலயச் சூழலிலுள்ள
பொதுமக்கள் உட்பட அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நல்லூர்க் கந்தன் உற்சவ கால முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாநகர மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் உற்சவ காலத்தில் மாநகர சபையினால் பல்வேறு நடவடிக்கைகள் வருடா வருடம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோன்று இம்முறையும் மாநகர சபையினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற அதேவேளை இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் வகையிலேயே இக்கூட்டம் நடைபெறுகின்றமையினால் இங்குள்ள அனைவரினதும் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு அதற்கேற்ற வகையில் மாநகர சபையின் செயற்பாடுகள் அமைய உள்ளன.

இதில் குறிப்பாக ஆலய சூழலை சுத்தமாக வைத்திருப்பதற்கும் ஆலயத்தின் புனிதத் தன்மையை பேணுவதற்கும் மாநகர சபை தன்னாலான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கவுள்ளது .

அதேபோன்று ஏனையவர்களும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும் இந்த மண்ணின் கலாசார பாரம்பரிய பண்பாட்டை எடுத்தியம்புகின்ற தளமாக இருக்கின்றது. ஆகையால் இதனைப் பேண வேண்டும் என்பதுடன் பாதுகாக்க வேண்டுமென்றும் கோரினார்.அத்தோடு ஆன்மீகத்தையும் அதிகளவில் வளர்த்தெடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

இந்த ஆலய உற்சவ காலத்தில் ஆலய உட்புற மற்றும் வெளிப்புற வீதித் தடைகள் போடப்பட இருக்கின்றது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற நேரத்தில் ஆலய சூழலைச் சுற்றியிருக்கின்ற பொது மக்கள் மாநகர சபைக்கு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

அத்தோடு பல்வேறு கோரிக்கைகளையும் விடுத்துள்ளனர். இத்தகைய கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக மாநகர சபை தன்னாலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இந்தக் கூட்டத்தில் மாநகர சபை அதிகாரிகள்,நல்லை ஆதீன முதல்வர், வர்த்தக சங்க பிரதிநிதிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சமயத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts