Ad Widget

நல்லாட்சி அரசாங்கத்தை நம்பிப் பிரயோசனமில்லை: மாவை

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஒரு வாக்குறுதியை கூட இன்றளவும் நிறைவேற்றவில்லை. இனியும் இவர்களை நம்பிப் பிரயேசனமில்லை என தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) யாழ். அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடைய செயற்பாடுகள் எமக்கு பலத்த ஏமாற்றத்தை தருகிறது. ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து பணியாற்றுவதற்காகவே எமது மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் இன்று அது நடக்கவில்லை.

எமது மக்கள் 30 வருடங்கள் போரினால் உயிரிழப்புக்களை சந்தித்தார்கள் பல இழப்புக்களை சந்தித்தார்கள். போரினால் இழந்தவற்றை மக்களுக்கு மீளப் பெற்றுக் கொடுக்கவே நாம் நல்லாட்சி அரசுடன் இணைந்து வேலை செய்தோம். ஆனால் இன்று ஏமாற்றம் மட்டுமே மிச்சம்.

சென்ற வருடம் வரவு செலவுத் திட்டத்தில் கூட ஜனாதிபதி மற்றும் பிரதமர், நிதி அமைச்சருடன் பேசி வட.கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் பிரத்தியேமாக 16 திட்டங்கள் கொண்டுவரப்பட்டு அது வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டு அவற்றுக்கான நிதியும் கூட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் இன்றுவரை ஒன்றும் நடக்கவில்லை. எமது மக்களுக்கு நிலம் இல்லை. வீடுகள் இல்லை. ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட முன்னாள் போராளிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் இல்லை.

கடந்த 3 வருடங்களில் செய்திருக்க வேண்டிய ஒன்றைக் கூட அரசாங்கம் இன்றளவும் செய்யவில்லை. நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. அழிந்த தேசம் கட்டியெழுப்பப்படவில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts