Ad Widget

நலன்சார் திட்டங்களால் எமது சமூகம் முன்னேறும் – டக்ளஸ்

மக்களின் நலன்களையும் மேம்பாட்டையும் முன்னிறுத்தியதாக திட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்திலேயே ஒட்டுமொத்த எமது சமூகம் முன்னேற்றத்தைக் காணமுடியும் என பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

dri

கண்டி வீதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான மதுபானசாலையால் ஏற்படும் இடர்பாடுகள் தொடர்பாக அமைச்சரின் செயலகத்தில் இன்றைய தினம் (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ‘எமது மாணவ சமூகத்தை மட்டுமன்றி நாம் வாழும் எமது சமுதாயத்தையும் நல்லதொரு நிலைக்குக் கொண்டு வரவேண்டிய முக்கிய பொறுப்பை உணர்ந்து கொண்டவர்களாக நாம் செயற்பட வேண்டும்.

குறிப்பாக மக்களுக்காக சேவையாற்றும் அதேவேளை, உதவும் மனப்பான்மையையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்’ அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது, யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையிலுள்ள தனியாருக்குச் சொந்தமான குறித்த மதுபானசாலையால் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள் தொடர்பில் அமைச்சருக்கு கல்விச் சமூகமும், பொதுமக்கள் பிரதிநிதிகளும் எடுத்து விளக்கினர்.

இது தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர், இரண்டு வாரத்திற்கு மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இயங்கும் பட்சத்தில் மாற்று இடம் ஏற்பாடு செய்யும் வரையில் மூன்று மாதகாலம் இயங்க முடியுமெனவும் சரியான முறையில் இயங்காத பட்சத்தில் ஒரு மாத காலத்திற்குள் அதனை நிரந்தரமாக மூடிவிடுமாறும் துறைசார்ந்தோருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

இதன்போது ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, மாநகர சபை ஆணையாளர் பிரணவநாதன், அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி.குகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Posts