Ad Widget

நயினாதீவு விவகாரம்! அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு சிவீகே கடிதம்

நயினாதீவு என்ற தீவின் பெயர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையைக் கவனத்தில் எடுக்குமாறு வடமாகாண அவைத் தலைவர் சிவீகே. சிவஞானம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதம் பின்வருமாறு,

 

“அத தெரண’’ என்ற இணையத் தளத்தில் நாகதீப என்ற தீவின் பெயரை நயினாதீவு என்று மாற்றம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளிக்காது என்று தாங்கள் கூறியதான செய்தி ஒன்றுக்கு எமது அவதானம் கோரப்பட்டுள்ளது.

இந்தவிடயம் முழுமையாக தவறாக புரிந்து கொண்டும் தவறாக உணர்ந்து கொண்டுள்ளதாகவே தோன்றுகிறது. எனினும் விடயம் மறுபக்கமானது.

நாம் தங்களுக்கும் ஏனையோருக்கும் தொலைநகல் மூலமாகவும் பதிவுதபால் மூலமும்,தங்களது அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளருக்கும் அனுப்பிய 06.11.2015 ஆம் கடிதத்தை தயவு செய்து பார்வையிடுமாறு வேண்டுகிறோம்.

நினைவுக்கெட்டாத காலம் முதல் இந்த தீவு நயினாதீவு என்ற பெயரினாலேயே அடையாளப்படுத்தப்பட்டுவந்துள்ளது. சகலஅரசாங்கப் பதிவுகளிலும் ஆவணங்களிலும் அவ்வாறே உள்ளது.

எனினும் வேலணை பிரதேசசபையின் வட்டார எல்லை நிர்ணயம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் வட்டாரம் 8 மற்றும் 12 என்பனவும் ஜே/34, ஜே/35 மற்றும் ஜே/36 என்பன “நாகதீபம்” என்று தமிழிலும் “நாகதீப” என்று சிங்களத்திலும் உள்ளன.

எவ்வாறாயினும் ஆங்கிலத்தில் சரியான பெயரான நயினாதீவு என்றுள்ளமை, எல்லாக் காலத்திலும் இந்தத் தீவு நயினாதீவு என்றிருந்தமையை நிச்சயமாக நிரூபிக்கும்.

நாங்கள் கோருவதெல்லாம் இந்த வரலாற்றுப் பெயரான நயினாதீவு தொடரவேண்டும் என்பதே. இதில் பெயர் மாற்றம் என்ற கேள்வியே எழவில்லை. எல்லை நிர்ணயமீளாய்வுக் குழு இந்தத் தவறை மீளாய்வு செய்யும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related Posts