Ad Widget

நயினாதீவுத் துறைமுகத்தில் நெடுந்தீவுப் படகுகளை நிறுத்துவதில் சிரமம்

nainathevu-haberநெடுந்தீவில் இருந்து மிகக் கூடுதலான மக்களுடன் வரும் படகுகள் குறிகட்டுவான் துறைமுகத்தில் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் காரணமாக துறைமுகத்தில் அணைக்க முடியாமல் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ஏனைய படகுகள் அங்கிருந்து வெளியேறிய பின்னரே நெடுந்தீவில் இருந்து வரும் படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அதுவரை பயணிகளுடன் கடலில் சுற்றிக் கொண்டிருக்க வேண்டிய நிலை எற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பயணிகள் சில சமயங்களில் பஸ்சைத் தவறவிட வேண்டியுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது.

துறைமுகத்தில் நிற்கும் அதிகாரிகள் கூட இது தொடர்பில் கவனம் எடுப்பதில்லை எனவும், நெடுந்தீவுப் படகுகள் துறைமுகத்திற்கு வரும் போது ஏனைய படகுகள் அதற்கு வழி விட வேண்டும் என்ற விதிமுறை கவனிக்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக குறிகட்டுவான் துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் அண்மையில் கலந்துரையாடப்பட்டு நெடுந்தீவுப் படகுகள் வரும் போது பாலத்தின் மேற்குப் பகுதியில் வேறு படகுகள் எதுவும் நிறுத்தக் கூடாதென முடிவெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் எடுத்த முடிவை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் விரும்புகிறார்கள் இல்லை எனவும், இந்த நிலைமை நீடித்தால் நெடுந்தீவுப் படகுகளை குறிகாட்டுவானில் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நெடுந்தீவில் இருந்து வரும் பயணிகள் படகுக்கு நயினாதீவுப் படகு உரிமையாளர்கள் துறைமுகப் பாலத்தில் இடமளிப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

Related Posts