Ad Widget

நடுவர்களின் தவறான தீர்ப்பாலே போட்டி குழம்பியது – மத்திய கல்லூரி அதிபர்

நூற்றாண்டு வரலாற்றுப் பெருமைமிக்க வடக்கின் பெரும் போர், துடுப்பாட்டப்போட்டி நடுவர்களின் தவறான தீர்ப்பினாலேயே கைவிடப்பட்டது என யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் கவலை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சென்றல் நைற் ஒன்று கூடல் நிகழ்வு சனிக்கிழமை (15) இரவு 7.30 மணிக்கு கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் பழைய மாணவ சங்கத் தலைவர் எஸ்.தமிழ்அழகன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர்,

‘வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டியானது, வரலாற்றுப் பாரம்பரியத்தினை கொண்ட வடமாகாணத்தின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இடம்பெற்று வருகின்றது. இரு பாடசாலைகளும் வரலாற்றுப் பாரம்பரியங்களைக்கொண்ட புகழ்பூத்த கல்லூரிகளாக விளங்குகின்றது.

இவ்விரு பாடசாலைகளுக்கு இடையில் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற போட்டியானது கைவிடப்பட்டமை கவலையளிக்கின்றது. இம்முறை வடக்கின்பெரும் போர் போட்டியில் ஏதாவது ஒரு பாடசாலை வெற்றிபெறும் என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்த எங்களுக்கு நடுவர்களின் தவறான செயற்பாடு காரணமாக போட்டி கைவிடப்பட்டமை அதிர்ச்சியளிக்கின்றது.

இவ்விரு பாடசாலைகளுக்கும் இடையில் நீண்ட நட்புப்பாரம்பரியம் காணப்படுகின்றது. இதன் அடிப்படையில் நூற்றாண்டினைத் தாண்டியும் இப்போட்டியினை நடத்தி வருகின்றோம்.

இரு பாடசாலைகளினதும் பழைய மாணவர்களும் மாணவர்களும் போட்டியை நடாத்துவதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கியிருந்தமை பாராட்டிற்குரியது.

ஆனால் எதிர்பார்ப்புடன் விறுவிறுப்பினை ஏற்படுத்திக்கொண்டிருந்த போட்டியில் நடுவர்களின் செயற்பாடு போட்டியினை கைவிடும் நிலைக்கு கொண்டு சென்று விட்டது.

வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட பாடசாலைகளின் போட்டிக்கு நடுவர்களாக கடமையாற்றுபவர்கள் பொறுப்புணர்வுடன் நடுநிலையாக தமது கடமைகளை ஆற்ற வேண்டியது முக்கியமாக அமைக்கின்றது.

அடுத்து வருகின்ற வடக்கின் பெரும் போர் போட்டி இவ்வாறான குறைகள் நீக்கப்பட்டு சிறந்த முறையில் நடாத்தப்படவுள்ளது. எமது பாடசாலையினை பொறுத்தவரையில் பழைய மாணவர்களுடைய செயற்பாடு பாராட்டிற்கு உரியதாக விளங்குகின்றது’ என்றார்.

Related Posts