Ad Widget

நகுலேஸ்வரன் கொலை வழக்கு: 4 பேர் விடுதலை! கிராம அலுவலர் உட்பட மூவருக்கு விளக்கமறியல்!!

விடுதலைப் புலிகளின் முன்னாள் காவல்துறை உறுப்பினரான நகுலேஸ்வரன் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏழு பேரில் நான்கு பேர் விடுவிக்கப்பட்டனர்.

கிராம அலுவலர் உட்பட மூவர் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் உள்ள ஈசன் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது-40) என்பவர் கடந்த 12.11.2014 அன்று இரவு 8.30 மணியளவில இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டு இருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த கிராம அலுவலர் ஒருவர் உட்பட ஏழு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைத்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.

இந்த வழக்கு கடந்த புதன்கிழமை மன்னார் நீதிமன்றில் விசாரனைக்கு எடுக்கப்பட்டபோது இந்த ஏழு சந்தேக நபர்களையும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் முற்படுத்தினர்.

ஏழு சந்தேக நபர்களில் நான்கு பேர் விசாரனை மூலம் நிரபராதியென தெரியவந்ததாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் மன்றில் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அந்த நான்கு பேரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அப்பகுதி கிராம அலுவலகர் உட்பட ஏனைய மூவரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டார்.

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் ஏற்கனவே ஒரு கொலை குற்றம் தொடர்பாக வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெற்றபோது தலைமறைவாகி இருந்ததுடன் வழக்குக்காக இவர் நீதிமன்றுக்கு சமுகமளிக்காத நிலையில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்றும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்த சந்தேகநபர் நேற்று வெள்ளிக்கிழமை வவுனியா மேல் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

Related Posts