Ad Widget

நகரசபை உறுப்பினர் வீட்டில் ‘தமிழீழ மக்களுக்கு’ துண்டுப்பிரசுரம்!

notesஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் இந்திரன் கைலாஜினியின் வீட்டில் ‘தமிழீழ மக்களுக்கு’ எனக் குறிப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் (05) இரவு வீசிவிட்டுச் சென்றுள்ளதாக நகரசபை உறுப்பினரால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை, பொம்மன்துறை அமைந்துள்ள இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர், நகரசபை உறுப்பினரின் வீட்டின் நுழைவாயிலில் துண்டுப் பிரசுரத்தினை வீசிவிட்டுச் சென்றிருந்தனர்.

குறித்த துண்டுப் பிரசுரங்களைப் பாருங்கள் எனக் துண்டுப் பிரசுரங்களை வீசியவர்கள் கூறிச் சென்றதாகவும் நகரசபை உறுப்பினர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

இவ்வாறு வீசப்பட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘தமிழீழ மக்களுக்கு’,

அன்பான தமிழ் மக்களே!, இன்றைய காலம் எமது சுதந்திர போராட்ட பயணத்தின் அகிம்சை போராட்டத்திற்கான காலம். எம் இனம் அழிக்கப்பட்டதற்கு ஓர் நியாயம் வேண்டி நிற்கும் காலம்.

அதற்கு, ஒவ்வொரு தமிழ் மக்களும் என்ன செய்தோம் என மனசாட்சியை கேளுங்கள், அதற்கான பதிலும் உங்களிடத்திலேயே, எமக்கான நீதிப்பயணத்தில் உலகம் இதய சுத்தியுடன் செயற்படாவிட்டாலும், அதன் பாதையில், இங்குள்ள மக்களுக்கு ஓர் நியாயம் வேண்டுமென தமது பயணப் பாதையினை மாற்றி உள்ளது.

இப்பாதையை தடை செய்ய அரசு இயந்திரத்தினால் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும், அப்பாதையை திடப்படுத்த எமது நியாயங்களை ஒற்றுமையின் அடிப்படையில், கொண்டு செயற்பட வேண்டும். எமக்கான சுதந்திரம், பாதுகாப்பு, பொருளாதாரம், நிலம், எமது இயற்கை வளம், கலாசாரம், எல்லாம் சூறையாடப்படுகின்றன.

இச்சூழ்நிலையில் உங்கள் பயத்தினை தூக்கி எறிந்துவிட்டு, மாணவர்கள், ஊடகங்கள், படித்த சமூகம், பாமர மக்கள் என்ற வேறுபாடின்றி வீதிக்கு இறங்கி உங்கள் பிரச்சினையினை என்ன என்பதை உலகிற்கு சொல்லுங்கள். சொல்ல வேண்டிய நாங்கள் சொல்லாமல் இருந்தால், நாமே எமது பிரச்சினையினை குழி தோண்டிப் புதைப்பவர்கள் ஆகிவிடுவோம்.

இக்கடமை உங்கள் வரலாற்றுக்கான கடமை என எடுத்து மக்களுக்கு உழைக்கும் அரசியல் கட்சிகளும், பொது அமைப்புக்களும் பொதுமக்களை ஒன்று திரட்டி கடமை செய்யும் தருணம் இது.

தமிழ் இனத்தின் காவலர்கள்,

தமிழீழம்

என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த துண்டுப்பிரசுரம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts