Ad Widget

த.ம.பேரவையின் கூட்டத்தை தடுக்க முனைவது தமிழர் அரசியலுக்கு நல்லதல்ல: சட்டத்தரணி குருபரன்

தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய கூட்டம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து கிடைக்கப்பெற்ற கடிதங்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளதென யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை தலைவரும் சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார். தமிழர் அரசியல் போக்கில் இது சரியான பாதையல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கூட்டம் அரசியல் கலப்பற்றதென்பதை உறுதிப்படுத்துமாறு யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் நா.வேதநாயகன், யாழ். மாவட்ட கூட்டுறவு சபை செயலாளரிடம் கோரியிருந்தார். அவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே கூட்டம் நடைபெற்றதாக குறிப்பிட்ட குருபரன், அவ்வாறிருந்தும் குறித்த கூட்டத்தை குழப்புவதற்கு முயன்றவர்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறிவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த போதிலும், இறுதி நேரத்தில் வீரசிங்கம் மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், அங்கு குறித்த கூட்டத்தை நடத்தவிடாமல் தடுத்த பின்னணி குறித்து கண்டறியவுள்ளதாக சட்டத்தரணி குருபரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts