Ad Widget

தொலைபேசியில் சம்பந்தனை அழைத்த ரணில்! வீடு தேடிச் சென்ற சஜித்!!

இலங்கையின் இன்றைய அரசியல் களம் பரபரப்புக்கு மத்தியில் சென்று கொண்டிருக்கின்றது. போராட்டக்காரர்களின் கடும் அழுத்தத்தின் நிமித்தம் நாட்டை விட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தப்பிச் சென்றுள்ள நிலையில் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி நாட்டு மக்களிடத்திலும், அரசியல் பரப்பிலும், சர்வதேசத்திலும் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது. அடுத்த ஜனாதிபதி யார் என்ற தேர்தல் களத்தில் தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் அனைவரும் தங்களுக்கான ஆதரவைத் திரட்டுவதில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், தங்களுக்கு ஆதரவு கோரி பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நாடியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட வகையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அதன் தலைவர் சம்பந்தன் அறிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நேற்றைய தினம் மாலை சம்பந்தனின் வீட்டுக்கு நேரில் சென்று சம்பந்தனோடு கலந்துரையாடி தமது ஆதரவினைக் கேட்டுக் கொண்டதாக அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரியப்படுத்தியுள்ளார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் இவ்வாறு சஜித் பிரேமதாச சம்பந்தனின் வீட்டுக்குச் சென்று சம்பந்தனுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts