Ad Widget

தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்படுவதால் மருதனார்மடம் கடைகளைத் திறப்பது உடனடிச் சாத்தியமில்லை!!

மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னரே பொதுச் சந்தைத் தொகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதியளிக்க முடியும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கு கடந்த சில நாள்களாக முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனையில் தொற்றாளர்கள் கண்டறியப்படுவதால் பொதுச் சந்தை தொகுதி வர்த்தக நிலையங்களைத் திறப்பதற்கு உடனடியாக அனுமதிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மருதனார்மடம் வர்த்தக சங்க பிரதிநிதிகள் நேற்றைய தினம் வலி. தெற்கு பிரதேச சபையின் உறுப்பினர் தவராஜா துவாரகனை சந்தித்து மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

நேற்றைய தினம் காலை பத்து மணியளவில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் தவராஜா துவாரகனை சந்திப்பதற்காக ஒன்றுகூடிய போதும் வர்த்தக சங்க தலைவர், செயலாலர் .பொருளாளர், மருதனார்மட வர்த்கசங்க ஆலோசனைக்குழு பிரதிநிதிகள் மட்டுமே சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

“எமது வர்த்தக நிலையங்கள் கடந்த 11ஆம் திகதியிலிருந்து மூடப்பட்டுள்ளன. சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களுக்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினோம். பதின்நான்கு நாள்கள் தனிமைப்படுத்தலில் இருந்த எம்மிடம் இரு தடவைகள் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டன.

எமது கடைக்குள் காணப்படும் பொருள்கள் காலவதியாகின்றன – பழுதடைகின்றன.
மேலும் கனமழை காரணமாக மழைநீர் உள்சென்றுள்ளது. எமது தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். நாம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கடைகளை திறப்பதற்கான அனுமதியை பெற்று தரவேண்டும்” என்று மருதனார்மடம் பொதுச் சந்தை கட்டடத் தொகுதி வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

“பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவேண்டும். எதிர்வரும் வாரத்தில் திறப்பதற்கான அனுமதியை பெற்று தருவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றேன். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கவனத்திற்கு கொண்டுசென்று சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடப்படும்” என்று வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராஜா துவாரகன், வர்த்தகர்களிடம் உறுதியளித்தார்.

Related Posts