Ad Widget

தேர்தல் பாதுகாப்பு பணி தொடர்பில் இராணுவத்தையும் அழைக்கும் சாத்தியம்

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 71,100 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள நிலையில் மேலதிக பாதுகாப்பு பணிகள் தொடர்பில் இராணுவத்தினரின் பாதுகாப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இதன் பொருட்டு இராணுவப் படையணி தயார் நிலையில் உள்ளதுடன் இராணுவ படையணியை கடமைக்கு அழைக்கும் அதிகாரம் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கோனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

n.k.ilangakoon

அதன்படி தற்போதைக்கு பொலிஸாரே முற்று முழுதான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தேவை ஏற்படின் இராணுவத்தை அழைக்கவுள்ளதாகவும் அந்த அதிகாரம் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் T – 56 ரக துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளதாகவும் தேவையேற்படும் பட்சத்தில் அந்த துப்பாக்கிகளை பயன்படுத்த ஆலோசனைகளும் அவர்களுக்கு பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டதாவது;

சுதந்திரமானதும் சாதாரண தேர்தல் ஒன்றினை நடத்தி முடிப்பதற்குரிய சூழலை பேணும் பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இதற்காக பொலிஸார் அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் செயற்பட்டு தேர்தல்கள் ஆணையாளருக்கு ஒத்துழைப்பை நல்குவர் அத்துடன் பொலிஸார் தேர்தலின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை விளக்கி தேவையான ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையொன்று மாகாணங்களுக்குப் பிரிவான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

5,000 விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 71,100 பொலிஸார் இந்த தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ளனர். அத்துடன் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் 420 நிரந்தர வீதித்தடை சோதனை சாவடிகளும் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் நீடிக்கும் தற்காலிக வீதித்தடை சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளோம். சோதனை சாவடிகளில் சிவில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும்.

இதனைவிட 2,884 பொலிஸ் ரோந்து சேவை நடவடிக்கைகள் அனைத்து வாக்களிப்பு நிலையங்களையும் உள்ளடக்கிய வகையில் நடைமுறைப்படுத்தப்படும். இதனைவிட வாக்கெண்ணும் நிலையங்களில் பொலிஸ் பாதுகாப்பு பணிகளும் இன்று முதல் செயற்படுத்தப்படும். வாக்கெண்ணும் நிலையங்களுக்கு வெளியே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதனைவிட 8ஆம் திகதிக்கு பின்னரும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு பணிகளுக்கு தேவைப்படின் இராணுவத்தினர் அழைக்கப்படுவர். இது தொடர்பில் இராணுவ படையணி தயார் நிலையில் உள்ள நிலையில் அதனை அழைக்கும் அதிகாரம் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனைவிட கடமையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து பொலிஸாருக்கும் T-56 ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவசியம் ஏற்படும் பட்சத்தில் அதனை பயன்படுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

குற்றவியல் தண்டனை சட்டக்கோவையின் 93 மற்றும் 96 ஆம் சரத்துக்களுக்கு அமைய எதிராளிகளால் அல்லது எதிர்த்தரப்பினரால் பயன்படுத்தப்படும் பலத்துக்கு சமமான பலத்தை பிரயோகிக்கும் அதிகாரம் தொடர்பில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உரிய காரணங்கள் இருப்பின் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய அவர்கள் யாரிடமும் அனுமதி கோரத் தேவையில்லை.

தேர்தல் சட்டங்களை மதித்து நடக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும். அதனை மதித்து நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த பொது மக்கள் அரசியல் கட்சி ஆதரவாளர்கள் என அனைவரும் பொலிஸாருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

Related Posts