Ad Widget

தேர்தல் காலத்தில் பிணை வழங்குவது வன்முறைக்குத் தூண்டுகோலாக அமைந்துவிடும்!

கொலைக் குற்றச்சாட்டு சந்தேக நபர்களுக்கு தேர்தல் காலத்தில் பிணை வழங்குவது வன்முறைக்குத் தூண்டுகோலாக அமைந்துவிடும் எனக் கூறி, பருத்தித்துறை நீதிமன்றத்தின் கட்டளைப்படி விளக்கமறியலில் இருந்து வரும் இரண்டு சந்தேக நபர்களுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பிணை வழங்க மறுத்து கட்டளை பிறப்பித்துள்ளார்.

சின்னத்தம்பி திருச்செல்வம் என்ற நபரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி முத்துலிங்கம் சந்திரகுமார் என்பவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.இந்தக் கொலைச் சம்பவத்தில் இரண்டாவது சந்தேகநபரான சுப்பிரமணியம் வசிதரன் என்பவர் கடந்த மே மாதம் 13 ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் பருத்தித்துறை நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த இரண்டு சந்தேக நபர்களின் சார்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் சட்டத்தரணியினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்பம் நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது நீதிபதி இளஞ்செழியன், இந்த சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் மிகவும் குறுகிய காலமாகக் காணப்படுகின்றது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இன்னும் முற்றுப் பெறவில்லை. மேலும் குறிக்கப்பட்ட தேர்தல் காலங்களில் பாரதூரமான வழக்குகளில் கைது செய்யப்பட்டு விளக்கமறயிலில் இருந்து வரும் நபர்களுக்கு பிணை வழங்குவது தேர்தல் வன்முறைக்கு தூண்டுகோலாக அமைந்துவிடும்.

எனவே, தேர்தல் வன்மறைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டுமானால், பாரதூரமான குற்றச்சாட்டாகிய கொலைக் குற்றச்சாட்டு வழக்குகளுக்கான பிணை விண்ணப்பங்களுக்கு தேர்தல் காலத்தில் பிணை வழங்க முடியாது என தெரிவித்தார்.

மேலும் பிணை விசாரணைகளின்போது, சமூக நலன், நாட்டுக் கள நிலை என்பன கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என்று பிணை வழங்கும் சட்டத்தின் 14 ஆம் பிரிவு அறிவுறுத்துகின்றது. எனவே, பிணை மனுவை தேர்தல் காலத்தில் விசாரணைக்கு எடுப்பது என்பது, சமூக அவலத்தை ஏற்படுத்தும் எனக் கூறிய நீதிபதி இளஞ்செழியன் பிணை விண்ணப்பத்தை நிராகரித்தார்.

அத்துடன் இந்தப் பிணை விண்ணப்பம் தொடர்பான குறுகிய கால விசாரணையையும் நிராகரித்து, விசாரணைகளை செப்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Posts