Ad Widget

தேர்தலின் பின்னர் இராணுவத்தினரை சீண்டும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றது. -இராணுவத் தளபதி

எமது இராணுவம் மிக அர்ப்பணிப்புள்ளவர்கள் என்பதுடன் அவர்கள் எமது நாட்டுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்றால் அதனை தடுப்பதற்கு எப்போதும் தயாராகவே உள்ளனர்’ எனஇராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்கா தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதி, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற இராணுவ வீரர்களுடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் பதுங்கு குழிகளில் இருக்கும் போது எமக்கு எதிராக நடவடிக்கையை சிலர் மேற்கொண்டதுடன் எமது இராணுவத்தினரை மிகவும் நோகடிக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர். அப்போதெல்லாம் எமது இராணுவத்தினர் மிகவும் அமைதியாகவும் பக்குவத்துடனும் செயற்பட்டனர்’ என்றார்.

‘அதன் பின்னர் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டபோது எமது இராணுவத்தினர் மிகவும் சிறப்பாக செயற்பட்டு நாட்டுக்கான பணியை மேற்கொண்டு பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தனர். இவ்வாறான நிலையில் நாம் எம்மிடம் சரணடைந்த விடுதலைப் புலிகஇளுக்கு சிறப்பான புனர்வாழ்வை கொடுத்துதவினோம்.

அப்போதெல்லாம் நாம் எவ்வாறு புனர்வாழ்வை வழங்கப் போகின்றோம் என பார்த்தனர். ஆனால் நாம் எவரும் எதிர்பாராத வகையில் மிகவும் சிறப்பான முறையில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அவர்களுக்கான புனர்வாழ்வை அளித்து அவர்களை மீண்டும் சமூகத்தில் இணைத்தோம்’ என்று குறிப்பிட்டார்.

‘எமது இராணுவத்தினர் மக்களுக்கான தமது சேவைகளை பல்வேறு வழிகளில் மேற்கொண்டு வந்தனர். மக்களுக்கு தேவையான பல உதவிளையும் வழங்கினர். இதன் பின்னர் வட மாகாண சபை தேர்தலின் போது அரசாங்கம் தோல்வியடைந்ததை அடுத்து மக்களுக்காக இராணுவத்தினர் பெரும் சேவைகளை செய்த போதிலும் அரசாங்கத்துக்கு தோல்வி ஏற்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்தனர்.

ஆனால் நாம் அரசியலுக்கு அப்பால் இந்த நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் வெற்றி கண்டுள்ளோம் என்பதில் பெருமைப்படுகின்றோம். அந்த வகையில் எமது சேவை தொடர்ந்தும் மக்களுக்காக இடம்பெறும்.

ஆனால் தேர்தலின் பின்னர் இராணுவத்தினரை சீண்டும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றது. அவ்வாறான நிலை ஏற்பட்டு எமது நாட்டை பிளவுபடுத்தும் நிலை ஏற்பட்டால் எமது இராணுவம் அதனை தடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்’ என்று இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, ‘இராணுவத்தினருக்கு மத்தியிலும் சூழ்ச்சிகளை ஏற்படுத்த சிலர் முற்படுவர். எனவே அனைவரும் வழிப்பாக செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அத்துடன் எமது இராணுவத்தில் தேகாரோக்கியம் முக்கிய விடயமாகும். சிலர் பெருத்த வயிறுடன் காணப்படுகின்றனர். அவ்வாறானவர்கள் எமக்குள் இருந்தால் பதவியுயர்வுகள் கிடைக்காது. திடகாதிரமானவர்களாக உள்ளவர்களே சிறந்த நிலைக்கு செல்லமுடியும்.

அத்துடன் எமது இராணுவத்தினர் தமிழ், சிங்களம். ஆங்கிலத்தை கற்க வேண்டும் என்பதுடன் எமது இராணுவத்தினர் சிறந்த கல்விமான்களாக உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம்’ எனவும் இராணுவ தளபதி மேலும் கூறினார்.

Related Posts