Ad Widget

தேநீர்க்கடையை உடைத்து உள்நுழைந்த பொலிசார் இரு பெண்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர் !!

புத்தூர்- நவக்கிரி நிலாவரைச் சந்தியில் உள்ள தேநீர் கடையை உடைத்து உள்ளே நுழைந்த பொலிஸார் அங்கிருந்த இரண்டு பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இந்த இழுபறியில் பெண்ணொருவரின் மேலாடை கிழிந்து மார்பகங்கள் வெளியே தெரிந்தது அதைப் பற்றிக் கவலைப்படாது பொலிசார் அட்டகாசம் செய்ததாக பிரதேசவாசிகளால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பு சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் நடந்துள்ளது.

நிலாவரைச்சந்தியில் உள்ள இந்த தேனீர்க்கடையை பெண்ணொருவர் நடத்தி வருகிறார்.அங்கு மதுபானம் விற்கப்படுவதாக பொலிசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.இதனையடுத்து, நேற்றிரவு பொலிசார் அதிரடியாக கடைக்குள் புகுந்தனர்.அந்த சமயத்தில் கடை பூட்டப்பட்டிருந்தது.

கடையும் வீடும் ஒன்றாக அமைந்திருந்ததால் உரிமையாளர்கள் கடைக்குள் உறங்குவதே வழக்கமென கூறப்படுகிறது.பொலிசார் சென்ற போது,கடை நடத்தும் பெண், அவரது கணவனின் தாயார் ஆகியோர் உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

கதவை உடைத்து உள்நுழைந்த பொலிசார், பெண்ணின் தகப்பன் அருந்திவிட்டு மீதம் வைத்திருந்த கால்போத்தலிற்கும் குறைவான சாராயப் போத்தலை அங்கிருந்து மீட்டனர் என்றும், பெண்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றினர் என்றும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இரு பெண்களையும் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றும்போது நடந்த இழுபறியில் பெண்ணொருவரின் மேலாடை கிழிந்ததாக கூறப்படுகிறது.கடை நடத்தும் பெண்ணின் கணவரையும் பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நேற்றிரவு அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களின் ஒருவர் புற்றுநோயாளி என்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.

பெண் பொலிசார் இன்றி வந்து பெண்களை ஆடைகிழிய அலாக்காக தூக்கிப் போட்டு சென்றமை, கடையை உடைத்து நுழைந்தமை என்பன பிரதேச மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதே வேளை புத்துார்ச் சந்தியில் பிரதேசசபை மற்றும் தேவாலயம் ஆகியவற்றிற்கு அருகில் உள்ள மதுபாணக்கடையில் பொலிசார் லஞ்சம் வாங்கிக் கொண்டு அந்த மதுபாணசாலைக்கு எந்தவித கண்காணிப்பும் இன்றி சட்டவிரோத நடவடிக்கைகளைப் பார்க்காது விட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Related Posts