பொன்னாலை வீதியினைச் சேர்ந்த எஸ்.கந்தசாமி என்பவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் ஈ.பி.டி.பி கட்சிக்கு எதிராக முறைப்பாடொன்று பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவது
யாழ்.பொன்னாலை வீதியிலுள்ள வீடொன்றினை ஈ.பி.டி.பி கட்சியினர் தமது அலுவலகமாக கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பாவித்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் என்று கூறும் பொன்னாலை வீதியினைச் சேர்ந்த எஸ்.கந்தசாமி என்பவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் ஈ.பி.டி.பி கட்சிக்கு எதிராக முறைப்பாடொன்று பதிவு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டில், ‘குறித்த வீட்டிற்கான வாடகைப் பணத்தினை ஆரம்ப காலங்களில் ஈ.பி.டி.பியினர் செலுத்தி வந்தனர். எனினும் கடந்த பல வருடங்களாக வீட்டு வாடகை எனக்குத் தரவில்லை, அத்துடன், குறித்த வீட்டினை என்னிடம் ஒப்படைக்கும் படி பல தடவை ஈ.பி.டி.பியிடம் கோரியிருந்தேன். எனினும் அவர்கள் ஒப்படைக்க மறுத்திருந்தனர். இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தேன்.
மானிப்பாய் பொலிஸார் அந்த முறைப்பாட்டிற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறியமையினால், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வடமாகாண பணிமனையில் முறைப்பாடு செய்ய வந்தேன் என முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.
இந்த முறைப்பாட்டின் பிரகாரம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வடமாகாண பணிப்பாளர் க.தியாகராஜாவினால் யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.
யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வடமாகாண பணிப்பாளருக்கு வீடு கையளிப்பது தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடிய போதும் அதற்கான முடிவுகள் எட்டப்படவில்லை.
இதனால், இவ்விடயம் தொடர்பாக நீதிமன்றத்தினை நாடி தீர்வினைப் பெற்றுக்கொள்ள இருப்பதாக முறைப்பாட்டாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் சின்னத்துரை தவராசாவிடம் வினாவியபோது,
‘கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் குறித்த நபர் தமது சொந்த வீட்டினை நீங்கள் பயன்படுத்தி வருகின்றீர்கள். அந்த வீட்டினை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரியிருந்தார்’
ஆனால், பொன்னாலை வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகம் அமைந்துள்ள வீட்டினை நாங்கள் வேறு ஒருவரிடமே பெற்றுக் கொண்டோம். குறித்த நபர் (உரிமையாளர் எனக்கூறும் நபர்) நான் தான் வீட்டின் உரிமையாளர் எனக்கூறி 4 நாட்களில் வீட்டு உறுதியினைப் கொண்டு வந்தது தருவதாகக் கூறிச் சென்றவர் தற்போது 4 வருடங்களின் பின்னர் வந்துள்ளார்.
அவ்வாறு இருக்கும் பட்சத்தில், குறித்த வீடு இவருடையது என நீதிமன்றம் உறுதிப்படுத்தினால், நாங்கள் அந்த வீட்டினை கையளிப்பதாகவும், ஆனால் குறித்த வீட்டின் உரிமையாளர் இவர் இல்லை என்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாhளர் மேலும் கூறினார்.