Ad Widget

தெரிவுக்குழுவை சாடியுள்ள லசித் மாலிங்க

ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் புதிய தெரிவுக்குழுவினை வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க கடுமையாக சாடியுள்ளார்.

உபாதையில் பாதிக்கப்பட்டுள்ள தம்மை அணியில் இணைத்துக் கொண்டமை ஓர் பிழையான தீர்மானம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெரிவுக்குழுவின் தலைவராக முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வா கடமையாற்றுவதுடன், உறுப்பினராக குமார் சங்கக்கார கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக தாம் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகியதாகவும், தம்மை அணியில் மீள இணைத்துக் கொண்டமை பயனளிக்குமா என்பது சந்தேகமே என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண T20 போட்டித் தொடரில் பங்கேற்கும் நோக்கில் லசித் மாலிங்க நேற்று இந்தியா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இரண்டு நாட்கள் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டு தம்மால் முடியுமா எனப் பார்த்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு விளையாட முடியாவிட்டால் தமது இடத்தை மற்றுமொரு வீரருக்கு வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தாம் 70 வீத உடற் தகுதியைக் கொண்டிருந்த நிலையில் கூட தம்மை அணியில் இணைத்துக் கொண்டமை ஆச்சரியமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

உபாதையுடனான ஒருவரை அணியில் இணைத்துக் கொள்வதனை விடவும், உபாதையற்ற இளம் வீரர் ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்குது புத்திசாதூரியமான தீர்மானமாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு ஏற்பட்டுள்ள உபாதைக்கு ஒய்வு பெற்றுக் கொள்வது அவசியமானது எனவும், எவ்வளவு காலத்தில் நோய் குணமடையும் என்பது கூற முடியாது எனவும் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

Related Posts