Ad Widget

தென்பகுதியில் பெரிய வெங்காயத்திற்கு வழங்கும் இலவச காப்புறுதி வடபகுதி சிறிய வெங்காயச் செய்கைக்கு இல்லை!!

யாழ்ப்பாணத்தில் செய்கை பண்னப்படாத பெரிய வெங்காயத்திற்கு இலவச காப்புறுதி உண்டு ஆனால் மாவட்டத்தில் அதிக விவசாயிகளினால் மேற்கொள்ளும் சிறிய வெங்காயச் செய்கைக்கு இன்றுவரை இலவச காப்புறுதி கிடைப்பதில்லை என யாழ்ப்பாண மாவட்ட விவசாய சம்மேளணத் தலைவர் கந்தையா – தியாகலிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் கடந்த ஆண்டில் முதன் முதலாக 40 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட பெரிய வெங்காயத்திற்கு விவசாய அமைச்சு இலவச காப்புறுதி வழங்கியது. ஆனால் யாழில் இத்தனை ஆண்டுகளாக மேற்கொள்ளும் சிறிய வெங்காயத்திற்கு புறக்கணிக்கின்றனர். ஏனெனில் இலங்கையின் தென்பகுதியில் அதிகம் பெரிய வெங்காயச் செய்கை மேற்கொள்கின்றனர். அதேநேரம் சிறிய வெங்காயம் அதிகமாக வடக்கிலேயேயே மேற்கொள்ளப்படுகின்றது.

பெரிய வெங்காயச் செய்கை அழிவடைந்தால் இலவச காப்புறுதியாக ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா வழங்கப்படும் அதேநேரம் சிறிய வெங்காயச் செய்கை மேற்கொள்ளும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் ஆண்டிற்கு 1200 முதல் 1450 ஏக்கர் செய்கை மேற்கொள்ளும் நிலையில் அழிவடைந்தால் எந்தக் காப்புறுதியும் கிடையாது. இதனை கடந்த காலங்களில் வந்த அமைச்சர்களிடமும் கோரினோம். இருப்பினும் இன்றுவரை வழி கிட்டவில்லை.

வடக்கில் மேற்கொள்ளும் சிறிய வெங்காயம் தற்போது புத்தளம் பகுதிகளிலும் பகுதியளவில் மேற்கொள்ளப்படுகின்றது. இதேநேரம் கடற்றொழில் புரிபவர்களிற்கு கடலில் ஓர் அணர்த்தம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால் 10 லட்சம் ரூபா காப்புறுதி உண்டு . ஆனால் விவசாயி தோட்டத்தில் வீழ்ந்து உயிரிழந்தால் இவை கிடைக்காது. உதாரணமாக கடந்த ஆண்டில் ஏற்பட்ட இடிமின்னல் தாக்கத்தின்போது உயிரிழந்தவர்களிற்கு மாவட்டச் செயலாளரினால் விடுவிக்கப்பட்ட அணர்த்த முகாமைத்துவ கொடுப்பனவு மட்டுமே கிடைத்தது.

எனவே குறித்த விடயங்கள் தொடரபில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். என்றார்.

இது தொடர்பில் கமநல சேவைத் திணைக்கள அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது ,

சிறிய வெங்காயத்திற்கும் காப்புறுதி உண்டு . ஆனால் சிறிய வெங்காயத்தினை பாத்தியில் நாட்டினால் காப்புறுதி கிடையாது. வரம்பு கட்டி நட்டால் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். அதேநேரம் அதற்கு ஆயிரம் கண்டுகளிற்கு ஆயிரத்து 200 ரூபா காப்புறுதி செலுத்தியிருக்க வேண்டும். இருப்பினும் பெரிய வெங்காயத்திற்கு பணம் செலுத்த தேவை இல்லை என பதிலளிக்கின்றனர்.

Related Posts