Ad Widget

தென்னிலங்கையில் உள்ள தமது சொத்துக்களை பாதுகாக்க யாழ்ப்பாணத்தில் மக்களை ஏமாற்றி அரசியல் செய்கிறார்கள்!!

தியாகி திலீபனின் நினைவேந்தலை 2016ம் ஆண்டு நடத்தியவர்கள் நாங்கள், 2017ம் ஆண்டு எங்களுடன் சேர்ந்து நினைவேந்தலை நடத்த கேட்டது தமிழ் காங்கிரஸ், 2018ம் ஆண்டு யாழ்.மாநகரசபை செய்தது. பின்னர் இரு வருடங்கள் சீராக நடக்கவில்லை. பின்னர் எப்படி 6 வருடங்களாக தியாகி திலீபனின் நினைவேந்தலை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நடத்தியது?மேற்கண்டவாறு ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தியாகி திலீபனின் 35ம் ஆண்டு நினைவேந்தலில் தமிழ் காங்கிரஸ் மிக இழிவாக நடந்து கொண்டதை மறைக்கும் வகையில் அக்கட்சியின் பேச்சாளர் க.சுகாஸ் நேற்றுமுன்தினம் முற்றுமுழுதாக ஊடகங்களை அச்சுறுத்தி நடத்திய ஊடக சந்திப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில்,

ஜனநாயக போராளிகள் கட்சி நேற்றைய தினம் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

தங்களின் பிழைகளை மூடி மறைக்க அவசர அவசரமாக ஊடக சந்திப்பினை நாடாத்தி முன்னாள் போராளிகள் மீது அவதூறு பரப்பியுள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தலின் போது இருவர் காவடிகள் எடுத்து வந்த போது பொது மக்கள், முன்னாள் போராளிகள் என பலர் அவ்விடத்தில் நின்றார்கள். காவடி வரும் போது எந்த குழப்பமும் ஏற்படவில்லை.

அகில இலங்கை தமிழ் காங்கிரசினர் தான் குழப்பங்களை ஏற்படுத்தினார்கள். காவடியை இறக்குவதற்காக பொது சுடரினை சற்று தள்ளி வைக்குமாறு கூறிய போதே குழப்பங்கள் ஏற்பட்டன. தீபத்தை தள்ளி வைக்க முடியாது. காவடியை இங்கே இறக்க முடியாது என அடாவடி செய்த பின்னரே குழப்பம் ஏற்பட்டது. அது அனைத்து ஊடங்களிலும் வெளிவந்தன.

அடுத்து தாம் 06 ஆண்டுகளாக நினைவேந்தல் செய்து வருவதாக கூறுகிறார்கள். யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2016ஆம் ஆண்டு தியாக தீபத்தின் நினைவிடத்தை முதலில் துப்பரவாக்கி முதல் முதல் நிகழ்வை நாங்கள் தான்செய்தோம். அதற்கு ஆதாரங்களாக ஊடகங்கள் செய்திகள் உள்ளன. இறுதி நாள் ஊடகங்களில் வெளியான படம். ( அது தொடர்பான பத்திரிக்கை செய்திகளை ஆதாரங்களாக ஊடக சந்திப்பின் போது காட்டினார்)இவ்வாறாக இருக்க

ஆறு ஆண்டுகளாக தாம் செய்கிறோம் என்கிறார். அப்ப சுகாஸுக்கு கணக்கு தெரியாது போல் இனி நாம் அவருக்கு ஒன்று இரண்டு சொல்லி கொடுக்க வேண்டும் போல அல்லது நாம் முதல் முதல் செய்த ஒரு வருட நிகழ்வை மூடி மறைத்து தங்களின் சுயலாப அரசியலுக்காக எங்களால் நினைவு கூறப்பட்ட நினைவேந்தலை மறைக்கின்றார்கள்.

அடுத்து 2017ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்காக நாம் அவ்விடத்தை துப்பரவு செய்யும் போது அகில இலங்கை தமிழ் காங்கிரசினர் வந்து எங்களோடு கதைத்தார்கள். நாங்கள் இரு தரப்பும் சேர்ந்து ஒன்றாக செய்வோம். என எங்களுடன் பேச்சுக்களை நடத்தினர். மறுநாள் கட்சி அலுவலகத்திற்கு எம்மை அழைத்து, கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் கதைத்து நாங்கள் சம்மதம் தெரிவித்த பின்னரே இரு தரப்பினரும் சேர்ந்து தான் 2017ஆம் ஆண்டு நினைவேந்தலை நாம் செய்தோம்.

அப்ப நாங்கள் யார் ? இப்ப 2015ஆம் ஆண்டு எங்களை மஹிந்தவினால் உருவாக்கப்பட்டவர்கள் என்கிறார்கள். அப்ப ஏன் 2017ஆம் ஆண்டு எங்களை அழைத்து கதைக்க வேண்டும் ?அதேவேளை 2017ஆம் ஆண்டு முதல் முதல் மறவன்புலவு பிரபாகரன் தூக்கு காவடி எடுத்தார். அப்ப எங்களுடன் நின்றவர்கள் தான் அகில இலங்கை தமிழ் காங்கிரசினர்.

நாங்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸினரும் இணைந்து 2017ஆம் ஆண்டு நினைவேந்தலை நடாத்தினோம் என மறுநாள் ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தன. (செய்தி வெளிவந்த சில ஊடகங்களை காண்பித்தார்.) அடுத்து 2018ஆம் ஆண்டு யாழ்.மாநகர சபை முதல்வராக ஆர்னோல்ட் இருந்த போது மாநகர சபை ஆளுகைக்குள் தான் நினைவிடம் உள்ளது. அதனால் தாம் தான் செய்வோம் என கூறியமையால் சர்ச்சைகள் ஏற்பட்டன.

ஆனாலும் அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட அந்த நிகழ்விலும் நாங்கள் பங்குபற்றினோம். யுத்தம் முடிவடைந்த பின்னர் 2016ஆம் ஆண்டு முதலாவதாக நாங்கள் தனியே நினைவேந்தல் செய்கிறோம். அடுத்த ஆண்டு 2017 நாங்களும் காங்கிரசினரும் இணைந்து இரண்டவது நினைவேந்தலை செய்கிறோம். 2018ஆம் ஆண்டு மாநகர சபை செய்தது.

அடுத்த இரண்டு வருடம் நீதிமன்ற தடையுத்தரவு. இப்படி இருக்கையில் எப்படி 6 வருடங்கள் என சொல்கிறார்கள் ?

இவர்கள் தென்னிலங்கையில் உள்ள தமது சொத்துக்களை பாதுகாக்க யாழ்ப்பாணத்தில் மக்களை ஏமாற்றி அரசியல் செய்கிறார்கள். அவர்களின் சொத்துக்களை பாதுகாக்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வேணும். அதற்கு போராளிகளின் தியாகங்கள் தேவை. தலைவரின் சொல்லுக்கு செயல்வடிவம் கொடுத்தவர்கள் போராளிகள் , மாவீரர்கள். ஆகவே போராளிகளையே மாவீரர்களையோ கொச்சைப்படுத்த இவர்களுக்கு அதிகாரம் இல்லை.

நாங்கள் ஜீ ஜீ பொன்னம்பலத்தின் சிலைக்கு மாலை போட வரவில்லை. எங்கள் மக்களுக்காக தன்னுயிரை நீத்த தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தவே வருகிறோம். அவர்கள் விரும்பினால், ஜீ . ஜீயின் உருவ படத்தை பொத்துவில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஊர்வலமாக கொண்டு வரட்டும். அப்போது தெரியும் மக்கள் அவர்களுக்கு தரும் வரவேற்பு.

நாங்கள் மஹிந்த ராஜபக்சேவையோ கோட்டாவையோ இரகசியமாக சந்திக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் எங்களை சந்திக்க வர சொல்லி அழைப்பு விடுக்கப்பட்டது. நாங்கள் போனோம். அது ஊடகங்களுக்கும் தெரியும். பொய் சொல்லி ஒளித்து போகவில்லை. சந்திப்பின் போது தேர்தலில் தமக்கு ஆதரவு தர கோரினார்கள்.

நாங்கள் போராளிகள் விடயங்கள் உட்பட சில பிரச்சனைகளை சொன்ன போது அவர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. அதனால் நாம் சஜித்துக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்து யாழ்.ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு நடாத்தி அதனை பகிரங்கமாக தெரிவித்தோம். ஜனநாயக போராளிகள் கட்சியின் வட்ஸ் அப் குழுவில் வந்த ஒலிப்பதிவு ஒரு சிறுதுண்டு ஒலிப்பதிவை காட்டி திரிகிறார்கள்.

அப்படி ஜனநாயக போராளிகளுக்கு என எந்தவொரு வட்ஸ் அப் குழுவும் இல்லை என்றார்.

Related Posts