Ad Widget

தென்னாபிக்காவை பின்பற்றி இலங்கையில் உள்நாட்டுத் தீர்வு – டக்ளஸ்

KN-daklasதென்னாப்ரிக்காவிலிருந்து பெற்றுக் கொண்ட அனுபவத்தின் அடிப்படையில், இலங்கையின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு எட்டப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்தார்.

ஆனாலும் தங்களது தென்னாப்ரிக்கப் பயணத்தின் போது, அங்கு பேசப்பட்ட விஷயங்களை இப்போது முழுமையாக வெளியிட முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அந்நாட்டின் பிரச்சினைகளும் இலங்கைப் பிரச்சினைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டவை எனக் கூற முடியாது எனவும் அவர் கூறுகிறார்.

தென்னாப்ரிக்கா எப்படி தமது உள்நாட்டுப் பிரச்சினையை தீர்த்துக் கொண்டார்களோ அதேபோல இலங்கைப் பிரச்சினையையும் உள்நாட்டிலேயே தீர்த்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை இந்தப் பயணத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தேவானந்தா தெரிவித்தார்.

இலங்கையில் போருக்குப் பின்னரான காலத்தில் அரசு எடுத்துவரும் சில நடவடிக்கைகளை தென்னாப்ரிக்கா வரவேற்றுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

அடுத்த ஓரிரு நாட்களில் தமது பயணத்தில் இடம்பெற்ற விவாதங்கள் குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் தாங்கள் கலந்துரையாடவுள்ளாதாகவும் அவர் கூறினார்.

எனினும், இலங்கைக்குள் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் தங்களுக்கு இன்னும் கால அவகாசம் தேவை என்று தமது குழுவினர் முன்வைத்த கருத்துக்களை தென்னாப்ரிக்க தரப்பினர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை தென்னாப்ரிக்க தரப்பு எதையும் இலங்கையின் மீது திணிப்பதற்கு தயாராக இல்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

Related Posts