துப்பாக்கியால் சுட்டு பிரபல நடிகை தற்கொலை!

எம்.ஜி.ஆர். நடிப்பில் கடந்த 1973 ஆம் ஆண்டு வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்ற படமாக அமைந்து இருந்தது. அந்த படத்தை எம்.ஜி.ஆரே தயாரித்து இயக்கி இருந்தார். அப்போதே மிகுந்த பொருட் செலவில் வெளிநாடுகளிலும் இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தது.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களுமே எம்.ஜி.ஆர். ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்து இருந்தது. இப்போதும் பயணங்களின் போது இந்த பட பாடல்களை பலரும் ஒலிக்க விட்டு செல்வதையும் பார்த்து இருப்போம்.

இந்த படத்தில் மொத்தம் 10 பாடல்கள் இடம் பெற்று இருந்தன. லில்லி மலருக்கு கொண்டாட்டம், உலகம் அழகு கலைகளின் சுரங்கம், பச்சைக்கிளி முத்துச்சரம், சிரித்து வாழ வேண்டும், நிலவு ஒரு பெண்ணாகி என அந்த படத்தில் இடம் பெற்றிருந்த அத்தனை பாடல்களுமே இப்போதும் அனைவராலும் கேட்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பச்சைக் கிளி முத்துச்சரம் பாடல் மிகவும் பிரபலமான பாடலாகவே இன்று வரை இருந்து வருகிறது.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் எம்.ஜி.ஆர். ஜோடியாக மஞ்சுளா, லதா, சந்திரகலா, மேட்டா ரூங்ராத் ஆகிய 4 நடிகைகள் நடித்து இருந்தனர். இவர்களில் மேட்டா ரூங்ராத் தாய்லாந்தை சேர்ந்தவர் ஆவார். படத்தின் கதைப்படி எம்.ஜி.ஆர். தாய்லாந்துக்கு சென்று இருந்த போது அவரை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்த மேட்டா ரூங்ராத் பச்சைக் கிளி முத்துச்சரம் பாடலுக்கு எம்.ஜி.ஆருடன் இணைந்து நடனமாடி இருப்பார்.

இந்த பாடல் காட்சி மிகவும் அழகாக படமாக்கப்பட்டு இருக்கும். இதன் மூலமாக மேட்டா ரூங்ராத் அப்போது தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக திகழ்ந்தார். மேலும் அவர் படத்தில் கொஞ்சும் தமிழில் பேசிய வசன உச்சரிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது.

இந்த நிலையில் மேட்டா ரூங்ராத் நேற்று (03) தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 83 வயதாகும் அவர் தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் தனது வீட்டில் படுக்கை அறையில் நெற்றியில் குண்டு காயத்துடன் உயிர் இழந்து கிடந்துள்ளார். இதனை அவரது வேலைக்காரர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து அந்த நாட்டின் பொலிஸார் உடனடியாக விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

பாங்காக்கில் மின்பொறி மாவட்டத்திற்குட்பட்ட சேன்சேப் என்ற பகுதியில் தான் மேட்டா ரூங்ராத்டின் வீடு உள்ளது. அவரது இயற்பெயர் தாராவடி கிட்சுவான் ஆகும். சினிமாவுக்காக தனது பெயரை மேட்டா ரூங்ராத் என்று மாற்றிக் கொண்டார்.

தாய்லாந்தில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்த அவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். மேட்டா ரூங்ராத்தின் வீட்டிற்கு வந்த பொலிஸார் அங்கு பணியில் இருந்து 65 வயதான வேலைக்காரரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் நான் வெளியில் சென்று திரும்பிய அரை மணி நேரத்திற்குள் மேட்டா ரூங்ராத் தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

மாலை 4 மணிக்கு நான் வெளியில் சென்று விட்டு 4.30 மணிக்கு வீடு திரும்பினேன். அங்கு படுக்கை அறையில் துப்பாக்கியால் சுட்டு எனது வீட்டு முதலாளி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

மேட்டா ரூங்ராத் தற்கொலை செய்து கொண்ட அறையில் யாரும் நுழைந்ததற்கான எந்த அடையாளங்களும் காணப்படவில்லை என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் வைத்த இடங்களில் இருந்ததாகவும் இதனால் இந்த தற்கொலையில் எந்த சந்தேகமும் இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டா ரூங்ராத் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். 1961 முதல் அவர் சினிமாவில் நடிக்க தொடங்கினார். 1962 ஆம் ஆண்டு ‘வாய் ரூன் வாய் கா நோங்’ தொடருக்கான சிறந்த நடிகைக்கான கோல்டன் டால் விருதையும் அவர் பெற்றுள்ளார். மேலும் அவரை ஆசியாவின் கருப்பு முத்து என்று பாராட்டி திரை உலகினர் அழைத்து உள்ளனர்.

Related Posts