Ad Widget

தீர்வு கிடைக்காவிடின் வடபகுதி சுகாதார சேவைகள் யாவும் ஸ்தம்பிதம் அடையும் – நல்லூர் பிதேச சபை தவிசாளர்

உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் பணியாற்றிவந்த சுகாதார பரிசோதகர்களை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன் மீண்டும் பிரதேச சபைகளில் இணைக்க வலியுறுத்தியும், அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரியும் நல்லூர் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் 1மணிநேர கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

nallur-ps

இன்று காலை 10மணியளவில் நல்லூர் பிரதேச சபைக்கு முன்னால் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிறந்த சுகாதார சேவைக்கு பொதுசுகாதார பரிசோதகர்கள் அவசியம், மக்கள் நலனை விட வைத்தியர்கள் பெரியவர்களா? போன்ற சுலோக அட்டைகளை தாங்கியிருந்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நல்லூர் பிரதேச சபை தவிசாளர் க.வசந்தகுமார்,

நல்லூர் பிரதேச சபையின் சுகாதார பரிசோதகர்கள் மிக நீண்டகாலமாக எமது பிரதேச சபையின் நடவடிக்கையில் மிக உன்னதமாக செயற்பட்டு வந்தனர்.

எங்களுடைய பிரதேச சபைக்கு சுகாதார பரிசோதகர்களுக்கான வெற்றிடங்கள் இரண்டு காணப்பட்டன.ஆனால் 2013ம் ஆண்டு சுற்றுநிரூபத்திற்கமைய பிரதேச சபைக்கான வெற்றிடங்கள் நிறுத்தப்பட்டிருந்தன இருப்பினும் அவர்கள் பிரதேச சபையில் பணியாற்றி வந்தனர்.

அண்மையில் நடந்த சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும்,சுகாதார பரிசோதாகர்களுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அவர்கள் மீண்டும் சுகாதார பரிசோதகர்களை சுகாதார திணைக்களத்தின் கீழ் பணியாற்ற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இதனையடுத்து சுகாதார பரிசோதகர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களிடம் முறையிட்டுள்ளனர். இதனால் உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கும் வடமாகாண சுகாதார அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது ஆறு மாத காலம் வரை சுகாதார பரிசோதகர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்களுடன் இணைந்து சேவையாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய உள்ளுராட்சி அமைச்சின் அதிகாரத்தை பெற்று பிரதேச சபையில் மீண்டும் இணைப்பதாக வடக்கு சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால் அவர்கள் மீண்டும் பிரதேச சபைகளில் இணைக்கப்படவில்லை. இந்த போராட்டம் இலங்கை பூராகவும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வடபகுதி உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடல் ஒன்றும் மீண்டும் சாவகச்சேரி பிரதேசசபையில் இடம்பெற்றது.

இதன்போது மீண்டும் சுகாதாதர பரிசோதகர்கள் பிரதேச சபைக்கு உள்வாங்கப்படவேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டடது. எனவே சுகாதார பரிசோதகர்கள் அனைவரும் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச சபைகளுக்கு உள்வாங்கப்படாத பட்சத்தில் வடபகுதி சுகாதார சேவைகள் அனைத்தும் முடக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சுகாதார பரிசோதகர்கள் சேவையில் இல்லாத காரணத்தினால் கொள்கலன்கள் மூடப்பட்டு காணப்படுவதுடன் கடைகளின் சுகாதார தன்மையும் அவதானிக்க முடியாதுள்ளது என்றார்.

Related Posts