Ad Widget

திவிநெகும நிதி மோசடி; முன்னாள் அமைச்சர் பசில் விடுதலை

திவிநெகும நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று இந்தத் தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்டது.

திவிநெகும நிதியத்துக்குச் சொந்தமான 33 மில்லியன் ரூபாயை, 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கூரைத் தகடுகளை வழங்க பசில் ராஜபக்ச முறைகேடாகப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ச மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலர் நிகால் ஜெயதிலக, மற்றும் கீத்சிறி ரணவக்க, பந்துல திலகசிறி ஆகியோருக்கு எதிராகவே குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பசில் ராஜபக்ச உள்ளிட்ட நால்வரினதும் குற்றப்பத்திரங்கள் மீதான விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்ற சுமார் நான்கு ஆண்டுகள் இடம்பெற்றன.

அரசு தரப்பு சாட்சியங்களை பரிசோதித்த பின்னர் சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்த எதிரிகள் தரப்பு சட்டத்தரணி, எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று மன்றுரைத்தார்.

குற்றச்சாட்டுகளில் இருந்து எதிரிகளை விடுவித்து விடுதலை செய்ய சமர்ப்பணம் செய்தார்.

அரச மற்றும் எதிரிகள் தரப்பு சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட 4 எதிரிகளையும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து விடுதலை செய்தது.

Related Posts