Ad Widget

திவிநெகும சட்டமூலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கும்

மாகாணசபைகளுக்குரிய அதிகாரங்களை மத்திய அரசாங்கத்துக்கு தாரைவார்க்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசாவை நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரியுள்ளனர். இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘ஏற்கெனவே நாங்கள் கூடி இத்திவிநெகும சட்டமூலத்தை எதிர்ப்பதாக முடிவெடுத்துள்ளோம். மாகாணசபைகளுக்குரிய அதிகாரங்களை மத்திய அரசாங்கத்துக்கு தாரைவார்க்க முடியாதெனவும் 13ஆவது திருத்தச் சட்டமூலத்திலுள்ள மாகாண அதிகாரமும் குறைக்கப்படுகிறது. கிராமிய மட்டத்திலான அபிவிருத்தி மாகாண மட்டத்திலிருந்து மத்திய அரசாங்கத்துக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்காது.

அத்துடன், உத்தியோகத்தர்களுக்கு எதிராக செயற்படவில்லை. சட்டமூலத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படுமிடத்து ஆதரவளிக்க பரிசீலிப்போம். தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினர் எவர் பாதிக்கப்பட்டாலும் அதனை எதிர்ப்போம்’ என்றார்.

இச்சந்திப்பின்போது, திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றப்படுவதால் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் தொடர்பில் சங்கத்தினரால் தெளிவுபடுத்தப்பட்டது.  மிக முக்கியமாக இலங்கை சமுர்த்தி அதிகாரசபையையும்  இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகாரசபையையும் இணைப்பதன் மூலம் திவிநெகும திணைக்களம் உருவாக்கப்பட்டு அனைத்து ஊழியர்களும் ஓய்வூதியதிட்டத்தினுள் உள்வாங்கப்படுவது தொடர்பிலும் இதனால் ஊழியர்கள் மிகவும் நன்மையடையவுள்ளமை தொடர்பிலும் சமுர்த்தி உத்தியோகத்தினரால் கூறப்பட்டது

இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கருணாகரன் ஜனாவையும் இவர்கள் சந்தித்தனர்.

திவிநெகும சட்டமூலம் தொடர்பான விடயங்கள் அடங்கிய பிரதியொன்றும் சங்கத்தினருக்கு நாடாளுமன்ற  உறுப்பினர் பொன். செல்வராசாவினால் வழங்கப்பட்டது.

Related Posts