Ad Widget

திறமையான தமிழ் பொலிஸ் அலுவலகர் பழிவாங்கப்பட்டுள்ளார்!!!

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் பிராந்திய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஜெயரோஷான் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவில் மன்னார் இலுப்பைக் கடவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண குடாநாட்டில் கடந்த மூன்று மாதங்களில் 200 கிலோ கிராமுக்கு அதிகமான கஞ்சா போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடித்த உப பொலிஸ் பரிசோதகர் ஜெயரொஷான், அவற்றுடன் தொடர்புடைய கடத்தல் காரர்களையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளார்.

மேலும் சாவகச்சேரி நிதி நிறுவனத்தில் கொள்ளை உள்ளிட்ட பெரும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களையும் அவர் தலைமையிலான பிரிவினரே கைது செய்துள்ளனர்.

தன் மீது எந்தக் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தாமல் எந்தவொரு ஒழுக்காற்று விசாரணையும் இடம்பெறாமல் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரால் தனக்கு வழங்கப்பட்ட பழிவாங்கல் இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் ஜெயரோஷான், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அறிவித்துவிட்டு பொலிஸ் சேவையிலிருந்து விலகப் போவதாகவும் கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வடமராட்சியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்திவரப்பட்ட 13 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை உப பொலிஸ் பரிசோதகர் ஜெயரோஷான் தலைமையிலான அணியினர் தடுத்துநிறுத்தி கைப்பற்றியுள்ளனர். அதனைக் கடத்திவந்த இருவரையும் அவர்கள் கைது செய்துள்ளனர்.

இந்த கடத்தல் முறியடிக்கப்பட்ட போது, அச்சுவேலியிலிருந்து நெடுந்தீவுக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடத்தல் காரர்களுடன் அலைபேசியில் பேசியுள்ளார்.

“பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சிவில் உடையில் பருத்தித்துறை வீதியில் பயணிக்கின்றனர். அவர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் திரும்பி வாருங்கள்” என்று அந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தல்காரர்களிடம் அலைபேசியில் தெரிவித்துள்ளார்.

கஞ்சா டத்தல்காரர்களுடன் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உரையாடிய போது அதனை உப பொலிஸ் பரிசோதகர் ஜெயரோஷான் மற்றும் அவரது அணியினர் கேட்டுள்ளனர். அதனால் கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரையும் 2 நாள்களுக்குள் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துவேன் என உப பொலிஸ் பரிசோதகர் ஜெயரோஷான் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கஞ்சா கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர், வடக்கு மாகாண மூத்த பொலிஸ் மா அதிபருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர். அதனால் உப பொலிஸ் பரிசோதகர் ஜெயரோஷான் கைது செய்த சந்தேகநபர்களிடமிருந்து அதிகளவு கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் ஆனால் 13 கிலோ கிராம் கஞ்சாவை மட்டுமே அவர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ளார்.

அதனையடுத்தே மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் உடன் நடவமுறைக்கு வரும் வகையில் உப பொலிஸ் பரிசோதகர் ஜெயரோஷானை மன்னார் இலுப்பைக் கடவைக்கு இடமாற்றம் செய்யுமாறு கடந்த திங்கட்கிழமை மூத்த பொலிஸ் அத்தியட்சகருக்கு பணித்துள்ளார்.

இளவாளையைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஜெயரோஷான், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டு யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

பெரியளவிலான் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்தல், கஞ்சா கடத்தல்களை முறயடித்தல் என அண்மைக்காலமாக அவரால் முன்னெடுக்கப்பட்டன.

பொது மக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய அவருக்கு குற்றவாளிகளை இணங்காண்பது இலகுவான விடயமாகவிருந்தது. எனினும் பல்வேறு குற்றச் செயல்களுடனும் போலி வழக்குகளைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தினால் எச்சரிக்கப்பட்டவருமான தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் (அவரது பெயர் பயன்படுத்தாதற்கு காரணம் அவருடைய பெயரில் மற்றொரு நேர்மையான பொலிஸ் உத்தியோகத்தரும் உள்ளார். அதனால் அவர் பாதிக்கப்படக் கூடாது) முறைப்பாட்டையடுத்து திறமையான தமிழ் பொலிஸ் அலுவலகர் பழிவாங்கப்பட்டுள்ளார்.

Related Posts