திருட்டுக் குற்றச்சாட்டில் பொதுமக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது மகனை காணவில்லை என தாய் ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருட்டில் ஈடுபடடார் என்ற குற்றச்சாட்டின் கீழ், 26 வயதுடைய இளைஞன் ஒருவர் பொதுமக்களால் சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட இளைஞன், அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த தனது மகன் எனத் தெரிவித்துள்ள தாயார் ஒருவர் பொலிஸாரிடம் தனது மகன் எங்கே? எனக் கேட்டுள்ளார்.
எனினும் பொலிஸார் தாம் அவரைக் கைது செய்யவில்லை என மறுத்துள்ளனர் என குறித்த தாயார் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்ட தனது மகனை பொலிஸார் அழைத்து சென்றனர் என சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்தவர்கள் தாயாரிடம் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் இடம்பெற்று சில நாட்கள் ஆகின்ற போதிலும் தனது மகனை பொலிஸார் இன்று வரை வெளிப்படுத்தவில்லை எனக் குற்றஞ்சட்டியுள்ள தாயார், காணாமல் போயுள்ள தனது மகனைக் கண்டு பிடித்துத் தருமாறு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.