Ad Widget

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நினைவுதினம் அனுஷ்டிப்பு!

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதன் 13 வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

திருகோணமலை கடற்கரையில் நேற்றையதினம் (புதன்கிழமை) மாலை குறித்த நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

திருகோணமலை இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவு தின நிகழ்வில், பலரும் கலந்து கொண்டு மாணவர்களின் உருவப்படத்திற்கு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு, இதே தினத்தில் திருகோணமலை, கடற்கரையில் வைத்து ஐந்து தமிழ் மாணவர்கள் அதிரடிப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

உயர்தர பரீட்சையை முடித்து விட்டு பல்கலைக்கழக நுழைவு அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருந்த மாணவர்கள் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த போது, கைது செய்யப்பட்டுப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பொலிஸாரும், அரசாங்கமும் இச்சம்பவத்தை ஆரம்பத்தில் மறுத்திருந்ததுடன், பின் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்றும், இராணுவத்தின் மீது கிரனைட் தாக்குதல் நடத்த முற்பட்ட போது, கிரனைட் வெடித்து உயிரிழந்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

எனினும், இறந்த மாணவர்களின் உடல்களைப் பரிசோதித்த அரசுப் பகுப்பாய்வாளர் இறந்த மாணவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூடுகள் காணப்பட்டதாகவும், இவர்கள் மிகக்கிட்டிய தூரத்தில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து இப்படுகொலைகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு, அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற போதிலும், இதுவரையில் நீதி கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts