யாழ்ப்பாணம், கற்கோவளம், தபால்பெட்டி சந்தியைச் சேர்ந்த 30 வயதான தாயொருவரையும் அவரது நான்கு வயது மகளையும் காணவில்லை என அவர்களின் உறவினர்கள், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (12) முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர்.
பிரதாப் ஜெனிஸ்ரலா விஜயகுமார் மற்றும் அவரது மகள் பிரதாப் சரணியா ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர் என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லியடியிலுள்ள வங்கியொன்றுக்கு சென்று வருவதாக நேற்று காலை சென்ற இவ்விருவரும், இதுவரையில் வீடு திரும்பவில்லை எனவும் காணாமல் பொயுள்ள பெண்ணின் அலைபேசி நிறுத்தப்பட்டுள்ளது என்றும் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணும் குழந்தையும் பருத்தித்துறை, ஆனைவிழுந்தான் பற்றைப்பகுதிக்குள் நஞ்சருந்திய நிலையில் மயங்கிக் கிடப்பதாக காணாமற்போன பெண்ணின் நண்பியொருவரின் கணவன், பெண்ணின் உறவினர்களை அலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். எனினும், உறவினர்கள் அவ்விடத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கு எவரும் இருக்கவில்லை.
இதனையடுத்து, பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் ஆனைவிழுந்தான் பகுதிக்குள் சென்று தேடுதல் நடத்தி வருகின்றனர்.