Ad Widget

தவறிழைப்பவர்களை டக்ளஸ் தண்டிப்பார் – பிரணவநாதன்

daklas‘தவறிழைப்பவர்களை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா வேட்டியினை மடித்துக்கட்டிக்கொண்டு அடிப்பார் என என்னுடன் கடமையாற்றி பலர் தெரிவித்திருந்தனர். எனினும் அவருடன் பழகிய பின்னர் மனித நேயம் மிக்க ஒருவர் அவர் என அறிந்துகொண்டேன்’ என்று யாழ்.மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையில் தற்காலிக தொழிலாளர்களாகக் கடமையாற்றிய வந்த 87 தொழிலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றயதினம் யாழ்.மாநகர சபையில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலே ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தார்.

‘எட்டு வருடங்களாக வன்னியில் கடமையாற்றி வந்தேன். அப்போது யாழ்ப்பாணத்திற்கு வரவேண்டுமென்பது என்னுடைய விருப்பம். ஆனால், யாழ்ப்பாணத்திற்கு போனால் அங்கு ஏதாவது தவறு செய்தால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அடிப்பார் என என்னுடன் கடமையாற்றியவர்கள் கூறியதினால் இங்கு வர முடியாமல் இருந்தது.

ஆனால், இங்கு கடமையாற்ற வந்த பின்னர் ஏதாவது அலுவல்களுக்கு அமைச்சரிடம் சென்றால், அப்போது அமைச்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் முதலில் சாப்பாடு தந்து விட்டுத்தான் பின்னர் பிரச்சினைகளைப் பற்றி கதைப்பார்.

அத்தருணத்தில்தான் அமைச்சர் எவ்வளவு மனித நேயம் மிக்கவர் என்பதனை நான் உணர்ந்து கொண்டேன் என்று அவர் கூறினார்.

மக்களுக்கான சேவையினை முதலில் செய்துவிட்டே அடுத்த வேலைகளை அமைச்சர் செய்வார். அது அவருடைய தனிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் கூட அவ்வாறு தான் அமைச்சர் செய்வார்.

இவ்வாறான மனிதாபிமானமிக்க அமைச்சர் எமது மக்களின் நலன்களில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார் என்பதனை மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

யாழ். மாநகர சபையின் ஊழியர்களின் பிரச்சினைகளை பல தரப்பினருக்கு தெரிவிக்க முயன்ற போதும், பெரியவர்களைச் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால், அமைச்சரை சந்திக்க நினைத்த போது, ஊழியர்களின் பிரச்சினைகளை கூறியதும் சந்திப்பதற்கான நேரம் உடனே கிடைத்தது’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts