Ad Widget

தமிழ் மக்கள் விடயத்தில் மகிந்தவின் நிலைப்பாட்டை பின்பற்றுகிறது நல்லாட்சி அரசாங்கம்

நல்லாட்சி அரசாங்கம் கூட தமிழ் மக்கள் விடயத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் எடுத்த நிலைப்பாட்டையே கொண்டிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்சவால் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதயாத்திரையை முறியடிக்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைக்காமல், ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட ராஜபக்ச மீது பழியை போட்டு நிபந்தனையில்லாத ஆதரவை கொடுத்து இன்றும் கூட இந்த அரசாங்கத்தை ஆட்சியில் வைத்திருப்பதற்கு மிக முக்கிய பங்களிப்பை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வழங்கி வருகிறது.

இந்த அரசாங்கத்தின் அநியாயாங்களை சுட்டிக்காட்டாமல், தமிழ் மக்களை திசைதிருப்பி நல்லாட்சி அரசாங்கத்தை காப்பாற்றி ராஜபக்ச மேல் குற்றச்சாட்டை முன்வைப்பதை தான் இன்று வரை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடைப்பிடித்து வருகிறது.

எனவே இந்த வெற்றுக்கோஷங்களாகக இருக்ககூடிய குற்றச்சாட்டுக்களை கைவிட்டு, தமிழ் மக்கள் ஏற்றக்கொள்ள கூடிய வகையில் அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைக்கவேண்டும் என்பதே தமது கோரிக்கை எனவும் குறிப்பிட்ட அவர்,

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அதை செய்யப்போவதில்லை என்பதும் தமக்கு நன்றாக தெரியும், தமிழ் மக்கள் அதனை செய்விப்பதற்கு முன்வரவேண்டும் இதுமாத்திரமன்றி தமிழ்தேசிய கூட்டமைப்பை ஓரங்கட்டும் செயற்பாட்டில் மக்கள் இறங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மக்களை பொறுத்தவரை ராஜபக்ச இன அழிப்பின் முக்கிய பங்காளி எனவும் அந்த இன அழிப்பிற்கு அவர் பொறப்புக்கூற வேண்டும் என்பது தமிழ் மக்களின் தேவையாக இன்றை இருக்கின்றது.

தமிழ் மக்களின் உரிமை சம்பந்தப்பட்ட அரசியல் தீர்வு, மகிந்த ராஜபக்சவால் முற்றுமுழுதாக நிராக்கப்பட்டது. தமிழ்மக்களுடைய இருப்பு அதாவது தேசம் என்ற அங்கீகாரத்தை வழங்ககூடிய ஒவ்வொரு தூணையும் அழித்துக்கொண்டிருக்கிற நிலையில் தான், தமிழ் மக்கள் ராஜபக்சவை எதிரியாகப் பார்க்கின்ற ஒரு தன்மை இருக்கின்றது.

எனவே ராஜபக்ச எவ்வாறு செயற்பட்டார் என்ற விடயம் மக்களிற்கு தெரியும் ஆனால் இன்று இருக்கின்ற நல்லாட்சி அரசாங்கம் எவ்வாறு செயற்படுகின்றது என்பது தான் இங்கு கேள்வி.

ராஜபக்ச மேற்கொண்ட இன அழிப்பிற்கு எதிராக தமிழ் மக்கள் நீதிகோரி நிற்கின்ற நிலையில், நல்லாட்சி அரசாங்கம் சிங்கள மக்களிற்கும் மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கும் வாக்குறுதி கொடுத்திருக்கின்றது. ராஜபக்ச குடும்பத்தையோ அல்லது இராணுவத்தையோ போர்க்குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், விசாரணை மேற்கொள்வதற்கோ அல்லது குற்றம்சுமத்துவதற்கோ அனுமதிக்கபோதவில்லை என வாக்குறுதி கொடுத்திருக்கின்றது

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் இன அழிப்பிற்கு எதிரான பொறப்புக்கூறல், இந்த அரசாங்கம் ஊடாக தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போதில்லை என்பது அம்பலமாகியிருக்கின்றது.

அதுமாத்திரமன்றி அரசியல் தீர்வு தொடர்பான விடயத்தில் மகிந்த ராஜபக்ச இது ஒரு சிங்கள பௌத்த நாடு, அந்தவகையில் சிங்கள பௌத்த ஆதிக்கத்திற்குள் மாத்திரம் இந்த நாட்டை வைத்திருப்பதற்கான ஒற்றையாட்சியை தாண்டி எதையும் கொடுப்பதற்கு தயாரில்லை. சமஷ்டியை தான் முற்றுமுழுதாக நிராகரிப்பதாகவும், பகிரங்கமாக சிங்கள மக்களுக்கு, வாக்குறுதிகளை கொடுத்து வந்திருப்பது தமிழ் மக்களுக்கு தெரிந்த ஒரு விடயம்.

இந்த நிலையில் தமிழ் மக்களுடைய உரிமை தொடர்பான விடயத்தில் இன்று இருக்க கூடிய அரசாங்கம் ராஜபக்ச தெரிவித்த கருத்துக்களை விட வித்தியாசமாக எதையும் கூறுகின்றார்களா என்றால் இல்லை என்பதே பதில்.

ஏனெினில் இந்த அரசாங்கம் தமது சொந்த மக்களிற்கு ஒவ்வொரு கட்டத்திலும் வாக்கறுதி கொடுத்துள்ளது.

பௌத்த மகாநாயக்கர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்தபோது இது ஒரு சிங்கள பெளத்த நாடு என தெளிவாக கூறிய அதேவேளை ஒற்றையாட்சியை தாண்டி எந்தவொரு தீர்விற்கும் தாம் தயாரில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் – என கஜேந்திகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Related Posts