Ad Widget

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பது சந்தேகமே!!! மெக்ஸ்வெல் பரணகம

முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு தனது மனச்சாட்சியை வெளிப்படுத்தியுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம ஐ.பி.சி.தமிழ் செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நோ்காணலில் அவர் மனம் திறந்துள்ளார். மெக்ஸ்வெல் பரணகம முன்னாள் நீதியரசர் ஆவார். அரசாங்கத்துக்கு சாதகமான முறையில் போர்க்குற்ற விசாரணைகளை மூடி மறைக்கலாம் என்ற உள்நோக்கில் மஹிந்த ராஜபக்ச இந்த ஆணைக்குழுவை நியமித்திருந்தார்.

ஆனால் எதிர்பாராத வகையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மைத்திரிபால சிறிசேன தலைமையில் நல்லாட்சி அரசாங்கம் பதிவியேற்றது. ஆனாலும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஸ்ரீலங்கா தொடர்பான குற்றச்சாட்டுக்களை சமாளிக்கும் நோக்கில் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் ஆயுட் காலம் இரண்டு முறை நீடிக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களை விசாரணை நடத்தி இந்த ஆணைக்குழு மக்களின் துயரங்களைக் கேட்டு தங்கள் மனச்சாட்சியை திறந்துள்ளது. தமிழ் மக்கள் எதிர்ப்பார்க்கும் அளவுக்கு இந்த ஆணைக்குழு உண்மையை சொல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்பதை அதன் தலைவரான மெக்ஸ்வெல் பரணகம ஏற்றுக் கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஆரம்பத்தில் இந்த ஆணைக்குழு நடத்தி வரும் விசாரணைகளில் நம்பிக்கை வைக்கவில்லை. அரசாங்கத்திடம் வழங்கப்பட்ட இரண்டு இடைக்கால அறிக்கைகளிலும் படையினரை காப்பாற்றக்கூடிய மற்றும் ஸ்ரீலங்கா அரசின் இறைமைக்கு பங்கம் ஏற்படாத வகையில் விதப்புரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் மூன்றாவது இடைக்கால அறிக்கையை கையளிப்பதற்கு முன்னர் இந்த ஆணைக்குழு சில விடயங்களில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அக்கறையீனங்கள் தொடர்பாக குற்றம் சுமத்தியுள்ளது.

அதுமாத்திரமல்ல காணாமல் போனோர் தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணையில் இரண்டாம் தரப்பு சாட்சிங்களை குறிப்பாக இராணுவ உயர் அதிகாரிகள் இராணுவ சிபாய்களை விசாரணை செய்வதற்கு கால அவகாசம் கிடைக்கவில்லை என பரணகம சாட்டுப்போக்கு கூறுகின்றார்.

அதாவது அரசியல்வாதிகள் குறிப்பாக அரசாங்கத்தில் உள்ளவர்கள் இந்த இரண்டாம்தரப்பு சாட்சிகளை விசாரணை செய்வதற்கு தடையாக இருக்கின்றனர் என்ற தொணியில் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே இவ்வாறான ஒரு சூழலில் பாதிக்கப்பட்ட மக்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணை எதற்கானது? அவ்வாறு எனின் காணாமல் போனவர்களின் உறவுகளுக்கான நீதி மறுக்கப்பட போகின்றதா? என்ற வினா இயல்பாகவே எழுகின்றது.

இந்த இடத்தில் தனது மனச்சாட்சியின் கதவகளை திறந்து இப்படி கூறுகிறார் மெக்ஸ்வெல் பரணகம. “அரசியல் தீர்மானங்களால் இரண்டாவது தரப்பினரை, சாட்சியாளர்களை விசாரணை செய்வதற்கான கால அவகாசம் இல்லை, அரசியல் தீர்மானங்களால் ஆணைக்குழுவின் கால அவகாசம் நீடிக்க முடியாமல் உள்ளது அரசியல் காரணிகள் மாறுவதால் மக்களிற்கான நீதி தூரப்போகிறது.

அவ்வாறு அரசியல் தீர்மானங்கள்தான் காரணம் என்றால் அரசியல்வாதிகளை தங்கள் வாக்குகள் மூலம் தெரிவு செய்கின்ற மக்களே முட்டாள்கள்” என்ற கருத்தை பரணகம வெளிப்படுத்துகின்றார்.

பரணகமவின் இந்த ஆதங்கத்தை நோக்கும் போது இந்த ஆணைக்குழு மூலம் நடத்தப்பட்ட விசாரணைகள் சர்வதேசத்திற்கான கண்துடைப்புத்தானா? என்ற மற்றுமொரு கேள்வி இயல்பாகவே உதிக்கின்றது.

அதேவேளை மாற்று வழியின்றி தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை தேர்ந்தெடுத்தனர். மக்கள் தங்களை தேர்ந்தெடுத்தனர் என்பதை சாட்டாக வைத்துக்கொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மக்களிற்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் கூட்டமைப்பு முட்டாளாக்கி வருவதாகவும் பரணகம குற்றம் சுமத்தினார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இவ்வாறான அசமந்த போக்குகளால் தமிழ் மக்களுக்கு நீதிகிடைக்காமல்போய்விடும் என்ற கவலையையும் பரணகம வெளியிட்டார்.

இதேவேளை சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருகிறோம் என்பதை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல்வேறு தடவைகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கூறி வந்தது. எனினும் இதுவரை எதுவும் நிறைவேறவில்லை. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு நீதிகிடைப்பதற்காக எவ்வாறான ஆக்கபூர்வ நடவடிக்கைளை மேற்கொண்டது என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுகின்றன.

அதேவேளை மக்களை பார்க்கின்றபோது வேதனையடைவதாக கூறும் பரணகம, வாழ்வாதாரத்தை கூட அவர்களால் முன்னெடுத்துச்செல்ல முடியவில்லை எனவும் கவலைப்பட்டார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் பதவியில் இருக்கும் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை விசாரணை செய்வதற்கு அல்லது அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு ஆணைக்குழுக்களை நியமிப்பது வழமை. ஆனால் அந்த ஆணைக்குழுக்கள் ஒவ்வொன்றும் இறுதியில் தமது மனச்சாட்சியை பதிவு செய்கின்றனர்.

ஆனாலும் ஆணைக்குழுக்கள் வழங்கிய அறிக்கைகள் அப்படியே கிடப்பில் போடப்படும் அதேவேளையில் அவற்றை பரீசிலனைக்கு கூட ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதிகள் எடுத்ததில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. எனவே பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையும் கிடப்பில் கிடக்கக்கூடிய நிலைமைதான் வரும் என்பதை அவரின் மனச்சாட்சி வெளிப்பாடுகள் மூலம் அறிய முடிகின்றது.

Related Posts