தமிழ் மக்களுக்கு சகல சலுகைகளும் கிடைக்கின்றன! பிரதமர்

இந்நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு கிடைக்கும் சகல சலுகைகளும் தமிழ் மக்களுக்கும் கிடைக்கின்றன என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரதமர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்-

”காணியுரிமை அற்றவர்களாக வாழ்ந்த மலையக மக்களுக்கு தற்பொது ஏழு பேர்ச்சஸ் காணி பெற்றுக்கொடுக்கப்பட்டு, காணியுடன் வீட்டுரிமையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இந்நாட்டில் வாழும் தமிழர்கள் தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். தேசிய பொங்கல் விழாவானது கடந்த காலத்தில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இம்முறை மலையகத்தில் நடைபெற்றுள்ளமையானது, இந்நாட்டில் சகல மக்களும் சகல சலுகைகளையும் பெற்று வாழ்கின்றனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. அத்தோடு பொங்கல் பண்டிகையை இந்துக்கள் மட்டுமன்றி நாட்டில் வாழும் சகல இன மக்களும் கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் சகல பிரதேசங்களிலும் தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்மூலம் மலையக இளைஞர் யுவதிகள் தொழில்வாய்ப்பை பெற்றுக்காள்ளமுடியும்.

அரசியல் ரீதியாக மட்டுமன்றி சமூக கலாசார ரீதியாகவும் மலையக மக்களின் முன்னேற்றம் குறித்து சிந்திப்பதோடு, மலையக மாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்தும் அவதானம் செலுத்தி வருகின்றோம்” என்றார்.

Related Posts