Ad Widget

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் அக்கறை அரசிற்கு உண்டா? – விக்கி

முதன் முறையாக தமிழர் ஒருவர் வட. மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை வரவேற்கத்தக்க விடயம் என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர் ஒருவரை வட மாகாணத்தின் ஆளுநராக நியமிப்பதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அபிவிருத்தி அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியும் என எண்ண இயலாது என்றும் தமிழரின் பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கத்துக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யுத்தத்தின் பின்னர் வட மாகாணம் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருந்தவேளை மக்கள் மனமறியாத இராணுவ அதிகாரிகளையும் தென்னிலங்கை அரசியல்வாதிகளையும் ஆளுநர்களாக நியமித்து வட மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவித்து வந்தது.

ஆனால் தற்போது முதல் முறையாக சிறந்த கல்விப் புலமையும் இனப்பிரச்சினைதொடர்பில் அரசியல் அறிவும் கொண்டுள்ள கலாநிதி சுரேன் ராகவனை நியமித்துள்ளமை எமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.

இந்த நியமனத்துக்கு பின்னால் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் இருக்கின்றதா என்பதையும் அல்லது எந்தளவுக்கு ஜனாதிபதி கலாநிதி சுரேன் ராகவனைச் சுதந்திரமாக செயற்பட அனுமதிப்பார் என்பதையும் நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆனால் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவும் புலமையும் அவரைச் சரியான முறையில் ஜனாதிபதிக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ அன்றி மக்களுக்காக சேவை செய்வதற்கு அவரை வழிநடத்தும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

அதேவேளை தமிழர் ஒருவரை வட மாகாணத்தின் ஆளுநராக நியமிப்பதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அபிவிருத்தி அபிலாஷைகளை நாம் பூர்த்திசெய்ய முடியும் என்று பொருள்கொள்ளல் ஆகாது என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கத்துக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

பௌத்த சமயம் பற்றி ஆராய்ச்சி செய்த கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் சிங்கள மொழி வழக்கிற்கு வர பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பௌத்தம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

எனவே வடக்கு கிழக்கு மக்களால் அப்போது கைவிடப்பட்ட பௌத்தம் இன்று எமது அரசியல் யாப்பின் ஊடாக மற்றைய மதங்களுக்கு மேலாக முதல் நிலையளித்து திணிக்கப்படுவது மத மாற்றம் செய்வதற்கு ஒப்பாகும் என்பதையும் அவர் அறிந்திருப்பார் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

புதிய ஆளுநரை வரவேற்கும் அதே நேரம் எமது புதிய கட்சி அவருக்கு சகல ஒத்துழைப்புக்களையும் நல்க ஆயத்தமாக இருக்கின்றது என்பதையும் நான் தெரிவித்து கலாநிதி இராகவன் அவர்களின் பதவிக்காலம் மக்களின் ஏகோபித்த மதிப்பையும் ஆதரவையும் பெற வேண்டும் என்றும் வாழ்த்துகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

Related Posts