தமிழ் அரசியல் கைதி விஸ்வலிங்கம் கோபிதாசனின் மர்ம மரணம் தொடர்பாகவும் தமிழ் அரசியற் கைதிகளை உடனடியாக விடுவிக்க கோரியும் காணாமற் போனவர்களை தேடிக் கண்டறிந்து குடும்பத்தாருடன் சேர்க்க சர்வதேசத்தை வலியுறுத்தி அரசாங்கத்திற்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று வடமராட்சி புலோலியில் நடைபெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஆர்ப்பாட்டம் புலோலி மெ.மி.த.க பாடசாலைக்கு அருகில் காலை 9.30 மணியளவில் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ் அரசியற் கைதியான விஸ்வலிங்கம் கோபிதாசனின் மர்ம மரணம் தொடர்பாக நீதியான விசாரணையை சர்வதேசம் கோர வேண்டுமெனவும் நீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு வழங்கி உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் கடத்தப்பட்டு காணாமற்போன எமது உறவுகளை கண்டறிந்து குடும்பத்தாருடன் சேர்க்க வேண்டுமென ஆகிய 3 கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கெதிராக ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்ம் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டவர்களின் சுலோக அட்டைகளில் “விடுதலை செய் விடுதலை செய் அரசியற் கைதிகளை விடுதலை செய்”, “கோபிதாசனின் மரணத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்”, “புணர்வாழ்வில் உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்”, “கொல்லாதே கொல்லாதே”, “இராணுவமே வெளியேறு”, “சுய நிர்ணய உரிமையை அங்கிகரி” போன்ற வசனங்கள் அடங்கிய அட்டைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, சரவணபவான் அனந்தி சசிதரன், சிவயோகன், சுகிர்தன், கஜதீபன், ஜங்கரநேசன் ஆகியோரும் கலந்துகொண்டதுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீகாந்தா மற்றும் தென்னிலங்கை அரசியற் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.