Ad Widget

தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு முன் நாட்டு மக்களுக்கு பூரண நிவாரணம்!!

நாட்டு மக்களின் நிலைமைகளை நன்றாக அறிந்துள்ள அரசாங்கமென்ற வகையில் எதிர்வரும் தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு முன்பதாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்த அவர், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் கலந்துரையாடி மக்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

சர்வ கட்சி மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றைய தினம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் உரையாற்றும்போதே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

மாநாட்டில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ;

அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை நாடு எதிர்கொண்டுள்ளது. அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொண்டு விரைவில் நாம் எமது உற்பத்தியில் தன்னிறைவு காணமுடியும் என்பதே எமது நம்பிக்கை. அத்தியாவசியப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதே அரசாங்கத்தின் கொள்கையாகும். அதனை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவு எமக்குக் கிடைக்காவிட்டாலும் இந்த மாநாட்டில் வடக்கு, கிழக்கு பகுதியிலிருந்து பெருமளவிலானோர் கலந்துகொண்டுள்ளமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த வெற்றியாகும். பொதுஜன பெரமுன ஒரு சிங்கள பௌத்த கட்சியல்ல. முழுநாட்டிற்குமான அனைத்து மக்களுக்குமான கட்சி என்பதை நாம் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அரசாங்கத்தின் செலவுகளை குறைத்துக்கொள்வது தொடர்பில் மாநாட்டில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் தற்போதைய ஜனாதிபதியைப் போன்று செலவுகளைக் குறைத்துள்ள ஜனாதிபதி எவரும் கிடையாது. எமது அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட பெரும் அர்ப்பணிப்புகளைச் செய்துவருகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன பேர்மிட் வழங்காத பாராளுமன்றமாக தற்போதைய பாராளுமன்றத்தை குறிப்பிடமுடியும்.

சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்வது தொடர்பில் பல கட்சிகளும் யோசனைகளை முன்வைத்துள்ளன. பிரதி வருடமும் சர்வதேச நாணய நிதிய அலுவலகம் எமக்கு அறிக்கையொன்றை வழங்கும். அதுதொடர்பில் மத்திய வங்கியுடன் ஆராய்ந்து அதன் அனுமதியுடன் உரிய பதில் அனுப்பப்படும். மத்திய வங்கியின் அதிகாரியொருவரும் அங்கு உள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் தொழில் நுட்ப ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதன் முகாமைத்துவக் குழு தொடர்பில் அமைச்சரவையிலும் கலந்துரையாடப்பட்டதுடன் அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது. தொழில்நுட்ப குழுவை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், நீதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஆகியோர் அதில் உள்ளடங்குகின்றனர்.

நாட்டு மக்களின் கஷ்டங்களை நாம் அறிவோம். நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட அனைத்து சிக்கல்களுக்கும் டொலர் நெருக்கடியே காரணம். அதனை நிவர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts