Ad Widget

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை ; வடக்கு அவையில் தீர்மானம்

வடக்கில் யுத்தம் காரணமாக சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு எதுவித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் யுத்தம் முடிந்து 5 வருடங்கள் ஆகியும் விடுதலை தொடர்பில் எதுவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. எனவே ஜனாதிபதி, நீதியமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை கோருகிறது.

19 ஆவது மாதாந்த சபை அமர்வு இன்று நடைபெற்று வருகின்ற நிலையில் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் குறித்த பிரேரணயினை சபையில் பிரேரித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தின் போது சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 8 தொடக்கம் 15 வருடங்களாக விசாரணைகள் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

யுத்தம் முடிந்து 5வருடங்கள் ஆகியும் விடுதலை செய்யும் நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. எனவே ஜனாதிபதி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

குறித்த பிரேரணையினையினை வடக்கு முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் வழிமொழிந்ததுடன் கைதிகள் விடுதலை தொடர்பில் சபையில் தீர்மானம் இயற்றுவது சரியானது என்றும் வெலிக்கடை சிறைக்கு சென்று தான் பார்வையிட்டதாகவும் கைதிகளுடன் கலந்துரையாடினதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் விடுதலை குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார் என்றும் எனினும் இதுவரை குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை என்றும் சபையில் முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து உறுப்பினர் அனந்தி சசிதரன் , சயந்தன் , பசுபதிப்பிள்ளை மற்றும் எதிர்க்கட்சி தலைவர் தவராசா ஆகியோரும் உரையாயாற்றியிருந்தனர்.

குறித்த பிரேரணை சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

Related Posts