Ad Widget

தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்யவும் – விநாயகமூர்த்தி

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கோரிக்கைவிடுத்துள்ளார்.

appathurai vinayagamoorthy

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை கொழும்பில் சனிக்கிழமை (17) சந்தித்து கலந்துரையாடும் போதே, விநாயகமூர்த்தி இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துக்கூறுகையில்,

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு இடம்பெயர்ந்த அனைவரும் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். இதற்குரிய நடவடிக்கைகளை தற்போதுள்ள அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.

இதனையே தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது முதல் பல இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலானவர்கள் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், பூஸா சிறைச்சாலை முகாமில் மட்டும் விசாரணைகள் இல்லாமல் 90க்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வசிக்கும் யாழ்ப்பாணம், வலிகாமம், வடக்கு மற்றும் திருகோணமலையின் சம்பூர் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இடம்பெயர்ந்துள்ள மக்களை சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்த வேண்டும்.

தமிழ்மக்கள் பலரை கைது செய்ய காரணமாக அமைந்த, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும். இச்சட்டத்தை நீக்க வேண்டுமென பல்வெறு தடவைகள் நாடாளுமன்றத்திலும் கோரியிருக்கின்றேன். அடுத்த நாடாளுமன்ற அமர்விலும் இதனை நீக்க வேண்டுமென்ற கோரிக்கையை சமர்ப்பிக்க இருக்கின்றேன்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு, சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தல் என்பனவற்றுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கடந்த அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக முன்வைத்திருந்த போதும் அதற்கு அரசு எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

தற்போது ஏற்பட்டிருக்கின்ற ஆட்சி மாற்றத்தினூடாக புதிதாக அமைந்துள்ள அரசாங்கம், தமிழ்மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் வகையில் செயற்பட வேண்டுமென்றும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்குரிய ஆவணங்களையும் தற்போது திரட்டி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts