Ad Widget

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை

விசாரணைக் கைதிகளாக நீண்டகாலமாக இருக்கும் அனைவரது விடுதலை பற்றியும் ஜனாதிபதி செயலாளர் மற்றும் உயரதிகாரிகளிடம் எடுத்துரைப்பதோடு அவர்களது விடுதலையை மிகவிரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரானந்த பல்லேகம கூறினார்.

welik5

தைப்பொங்கல் நிகழ்வு, கொழும்பு வெலிக்கடை மற்றும் புதிய மகசின் விளக்கமறியல் சிறைச்சாலைகளில் வியாழக்கிழமை (15) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டபோதே சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரானந்த பல்லேகம, மேற்கண்டவாறு கூறினார்.

அவர், தமிழ் அரசியல் கைதிகளின் முன்னால் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘உங்களின் ஏக்கம் எனக்கு நன்கு தெரியும். உங்கள் கண்களே அதற்கு சாட்சியாக இருக்கின்றன. நான் இந்தப் பதவியை ஏற்று இரண்டு வருடங்கள் ஆகின்றன. இதுவரை காலமும் உங்கள் ஏக்கங்களை சரியாக தீர்த்து வைக்க முடியவில்லை. காலமும் அதற்கு இடம்கொடுக்கவில்லை. ஆனால், இப்போது காலம் கனிந்திருக்கிறது.

தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். அந்த வழி நிச்சயம் உங்களுக்குப் பிறக்கும். புதிய மாற்றத்துக்காக அனைவரும் ஒத்துழைத்திருக்கிறார்கள். குறிப்பாக ஜனாதிபதியின் வெற்றியில் தமிழ் மக்களின் பங்கு அதிகமாகவிருக்கிறது. இதன்மூலம் அவர்கள் நல்லதொரு செய்தியையும் ஜனாதிபதிக்கு கூறியிருக்கிறார்கள். எமது உறவுகளை எங்களுடன் வாழ வழிசெய்யுங்கள் என்பதே அந்த செய்தி. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இவர்களின் ஆசையினை தீர்ப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறார். ஆகையினால், எதிர்காலத்தில் நிச்சயமாக நல்லது நடக்கும் என நம்புகிறேன்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் நீண்டகாலமாக இங்கிருக்கிறீர்கள். இவர்களின் நிலை தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் மற்றும் உயரதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன். அவர்களின் ஆலோசனைக்கமைய, உங்களின் விடுதலை துரிதப்படுத்தப்படும் என்ற உறுதியை இன்றைய தைத்திருநாள் பரிசாக உங்களுக்கு நான் வழங்குகிறேன்’ என தெரிவித்தார்.

Related Posts