Ad Widget

தமிழ்மக்கள் தங்களை நேசிப்பதாக இராணுவம் மனப்பால் குடிக்கிறது – அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

வடக்கில் இருந்து படையினர் வெளியேற்றப்பட வேண்டுமா என்பது தொடர்பாக வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டால் தமிழ்மக்கள் அதற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று கிளிநொச்சி மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சுதந்த ரணசிங்கா தெரிவித்திருக்கிறார்.

2

இராணுவம் எமது மண்ணைவிட்டு வெளியேறவேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மாத்திரம் சொல்லவில்லை. தமிழ் மக்களின் நிலைப்பாடும் அதுதான். ஆனால், தமிழ் மக்கள் தங்களை நேசிப்பதாக இராணுவம் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறது என்று வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்ற வெள்ளிக்கிழமை (03.10.2014) வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,

கிளிநொச்சி மாவட்ட இராணுவத்தளபதி இராணுவம் பாடசாலை மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் நிதி உதவி செய்வதாகப் பெருமைப்பட்டுள்ளார். பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்திருக்கிறார். இராணுவம் அவசரகால நிலைமைகளைத் தவிர ஏனைய நேரங்களில் சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தேவையில்லை.

மாகாணசபையின் மீது மத்திய அரசு பிரயோகிக்கின்ற அழுத்தங்களையும் தாண்டி, ஒதுக்கப்பட்ட சொற்ப அளவு நிதியைப் பயன்படுத்தியே நாம் எமது மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றவேண்டி உள்ளது. எம்மைச் சுதந்திரமாக இயங்கவிட்டு, போதிய நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டால் எங்களால் எமது மக்களுக்கான அபிவிருத்தியை மிகச் சிறப்பாக முன்னெடுக்க முடியும். ஆனால், அரசு மாகாணசபைக்கென்று ஒதுக்கப்பட்ட விடயங்களைக்கூட எங்களுடன் எவ்வித ஆலோசனைளும் இல்லாமல் தன் கையில் எடுக்கிறது. எல்லா வேலைகளிலும் அழையா விருந்தாளியாக இராணுவத்தை ஈடுபடுத்துகிறது. இராணுவத்திடம் தமிழ் மக்களைக் கையேந்த வைத்தால், காலப்போக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தை தமிழ் மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று அரசு தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறது.
தமிழ்மக்கள் இலங்கைப் படையினரை விடுதலைப் புலிகளிடம் இருந்து தங்களை மீட்கவந்த மீட்பர்களாக ஒருபோதும் கருதியதில்லை. படையினரைத் தங்களது சொந்த நிலங்களில் நிலைகொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு இராணுவமாகவே தமிழ்மக்கள் கருதுகிறார்கள்.

ஒரு காலத்தில் வடக்கின் விவசாய அபிவிருத்தியில் பெருபங்காற்றிவந்த வட்டக்கச்சி விதை உற்பத்திப் பண்ணையில் 410 ஏக்கர் இராணுவத்தினரிடமும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திடமும்தான் இருக்கிறது. இங்கு எங்களது விவசாயத் திணைக்களம் வெறும் 31 ஏக்கரில் மாத்திரம் ஒண்டிக்குடித்தனம் செய்யவேண்டியிருக்கிறது. அதேபோன்றுதான், இரணைமடுச்சந்தியில் இருந்த எமது விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான சேவைக்காலப் பயிற்சி நிலையத்திலும் இராணுவமே நிலைகொண்டிருக்கிறது. இப்படி, எமது நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கும் படையினரை நாங்கள் எவ்வாறு அபிவிருத்தி இராணுவம் என்று அழைக்க முடியும்? இவர்களை மண்ணில் தொடர்ச்சியாக நிலை கொண்டிருங்கள் என்று எமது மக்கள் ஒரு போதும் கோரமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

Related Posts