Ad Widget

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலக நான்கு கட்சிகள் முடிவு?

tnaஐந்து கட்சிகள் இணைந்த கூட்டமைப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய நான்கு கட்சிகள் மாத்திரம் இணைந்து தங்களை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவை மேற்கொள்ள அந்நான்கு கட்சிகளும் தீர்மானித்துள்ளன.

தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் ஆகிய நான்கு கட்சிகளுமே இந்த தீர்மானத்தை எடுக்க உத்தேசித்துள்ளன. இருப்பினும், இதற்கான இறுதித் தீர்மானம் தமிழரசுக் கட்சியின் முடிவைப் பொறுத்தே அமையும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ முக்கியஸ்தருமான வினோ நோகதாரலிங்கம் தெரிவித்தார்.

“தனித்தனியாக இனி செல்ல முடியாது என்பதனால் நாம் இறுதியாக நான்கு கட்சிகள் கூடி பதிவு செய்யலாமா என்பது தொடர்பாகவும் அது சாத்தியமானால் பதிவை மேற்கொள்வது தொடர்பிலும் அல்லது வேறு எவ்வாறு கட்சிகளின் நடவடிக்கைகளை முன்னகர்த்திச் செல்லலாம் என்பது தொடர்பிலும் நாம் ஆராய்ந்திருக்கின்றோம்.

ஆகவே இறுதிக்கட்டமாக நாம் தமிழரசுக் கட்சியுடன் பேசி முடிவுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் கொடுத்துள்ளோம். இல்லையேல் நாம் நான்கு கட்சிகளும் இணைந்து எதிர்வரும் மாத இறுதிக்கிடையில் பதிவு செய்வது என தீர்மானித்துள்ளோம்” என்றும் அவர் கூறினார்.

“அரசாங்கம் இன்று சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளது. குறிப்பாக இறுதி யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் போர்க்குற்றம் உட்பட பல பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இதற்கு காரணம் புலம்பெயர் தேசத்தில் உள்ள மக்களது போராட்டங்களும் தமிழகத்தில் உள்ள எமது உறவுகளின் போராட்டமும் அதற்கு அப்பால் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் போராட்டம் என்பனவாகும்.

இவையே இன்று தமிழ் மக்கள் மீது சர்வதேசம் திரும்பி பார்க்க வைப்பதற்கும் காரணமாகியுள்ளது. இந்த அரசாங்கம் இன்று நடுங்கிக்கொண்டிருப்பதற்கு காரணம் சர்வதேசம் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்பதனாலேயே ஆகும். எனவே தமிழ் மக்களது அகிம்சை வழி போராட்டங்கள் எமக்கான நிரந்தரமான அரசியல் தீர்வுக்கோ அல்லது விடுதலைக்கோ வழிவகுக்கும்” என்றும் வினோ எம்.பி குறிப்பிட்டார்.

“நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக பதிவு செய்கின்றபோது தான் எமது போராட்டங்களை இன்னும் கீழ் மட்டத்தில் இருந்து கட்டமைப்புக்களை உருவாக்கி கொண்டு செல்வது இலகுவாக இருக்கும். எனவே தான் நாம் பதிவு விடயத்தை முன்னிலைப்படுத்துகின்றோம்.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று அக்கட்சியின் பெயரை தேர்தலுக்காக பயன்படுத்துகின்றோமே தவிர தனித்தனிக் கட்சிகளாகவே இருக்கின்றோம். சில விடயங்களில் கூட்டமைப்பாக இயங்குகின்றோமே தவிர பெரும்பாலான விடயங்களில் தனித்தனியாக கட்சியின் நலன் சார்ந்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எனவே கிராம மட்டத்தில் இருந்து கட்டமைப்புக்களை உருவாக்குவதானது எமது அரசியல் ரீதியிலாக மக்களின் அபிப்பிராயங்களை கேட்பதற்கும் மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதற்குமான திட்டங்களையும் கொள்கைகளையும் வகுப்பதற்கும் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

பதிவு செய்யப்பட்டதன் பின்னர் எமக்குள் இருக்கும் வேறுபாடுகள் களையப்பட்டு அல்லது ஒவ்வொரு கட்சியும் பிரிந்து இருப்பதால் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு ஒரே குரலாக ஒரே நிலையில் இருந்து பேசக்கூடியதாக இருக்கும்” என்றும் வினோ எம்.பி சுட்டிக்காட்டினார்.

“இது விடயமாக நாம் கடந்த காலத்தில் பேசி வருகின்றோம். 5 கட்சிகளும் கூடி பதிவு செய்தல், அதி உயர்பீடம், நிதிக்குழு, தேர்தல் தொடர்பான குழு மற்றும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் குழுக்கள் அமைப்பது தொடர்பாக ஆராந்திருக்கின்றோம். ஆனால் தமிழரசுக் கட்சி எமக்கு நிபந்தனைகளை விதிப்பதும் காலம் தாழ்த்துவதுமான நடவடிக்கையை எடுக்கின்றது.

அவர்கள் இதில் விருப்பமில்லாத நிலையில் இருப்பதும் அல்லது சாக்குபோக்கு சொல்வதும் எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். எனவே தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்துள்ள நிலையில் நாம் தனித்தனியாக இனி செல்ல முடியாது என்பதனால் பதிவு விடயம் சாத்தியமற்று போகாதிருப்பதற்காக வேறு வழியின்றி நாம் இறுதியாக நான்கு கட்சிகள் கூடி பதிவு செய்யலாமா என்பது தொடர்பாகவும் அது சாத்தியமானால் பதிவது தொடர்பிலும் அல்லது வேறு எவ்வாறு இதனை முன்னகர்த்தி செல்லலாம் என்பது தொடர்பிலும் நாம் ஆராய்ந்திருக்கின்றோம்.

ஆகவே இறுதிக்கட்டமாக நாம் தமிழரசுக் கட்சியுடன் பேசி முடிவுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் கொடுத்துள்ளோம். இல்லையேல் நாம் நான்கு கட்சிகளும் இணைந்து எதிர்வரும் மாத இறுதிக்கிடையில் பதிவு செய்வது என தீர்மானித்துள்ளோம்” என்றார்.

இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் எந்த பிளவுகளுமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் கடந்த வாரம் கொழும்பில் கூடி பல முக்கியமான தீர்மானங்களை மேற்கொண்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்வது என்ற முக்கிய தீர்மானமும் இதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

அத்துடன் இது தொடர்பில் அங்கத்துவ கட்சிகளின் ஆலோசனைகளை மார்ச் 20ஆம் திகதி முன்னர் சமர்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா குறிப்பிட்டார்.

இதற்கு மேலாக கட்சியின் நடவடிக்கைகளையும் விஸ்தரிக்கும் வகையில் உயர் பீடம் ஒன்றை அமைப்பதென்றும் முடிவு காணப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சியிலிருந்து தலா மூவர் இணைக்கப்படும் வகையில் உயர் பீடம் அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

Related Posts